அகத்திய முனிவரின் உபதேசப்படி குருவின், குருவான ஐயப்பனையே முதல் குருநாதராக ஏற்று மாலை அணிந்து, மண்டல விரதத்தை துவங்குகிறார் மன்னர். அரண்மனை ஒரு கோயில் போன்று அலங்காரம் செய்யப்பட்டு, நாள்தோறும் காலை, மாலையில் ஐயப்பனுக்கு பூஜைகள், வழிபாடுகள், ஆன்மிக நிகழ்ச்சிகள், நாட்டு மக்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்கள் வழங்குதல் என விழாக்கோலம் பூணுகிறது பந்தளம்.
மண்டல பூஜைக்கான நாள் நெருங்கியதால் சபரிமலை செல்ல தயாராகிறார் மன்னர் ராஜசேகரபாண்டியன். அகத்தியர் கூறிய உபதேசத்தின்படி இருமுடி கட்ட முடிவு செய்கிறார். அதாவது, புலிப்பால் தேடி ஐயப்பன் காட்டிற்கு சென்றபோது, தான் கட்டி அனுப்பிய அந்த இரு முடிச்சுகளை கொண்ட இருமுடி கட்ட தயாராகிறார். அப்போது தனக்கு பிறகு தனது மகனும் இளவரசனுமான ராஜராஜன் மற்றும் நாட்டு மக்களுக்கு இந்த வழிபாட்டு முறை தெரிய வேண்டும் என்பதற்காக அரண்மனையில் பொது உபதேசம் வழங்குகிறார் மன்னர்.
‘‘தலைப்பாரம் சுமப்பவரின், வாழ்க்கை பாரத்தை நான் சுமப்பேன். கஷ்டப்பட்டு விரதமுறையை பின்பற்றுபவர்களின் இஷ்டப்படும் தேவையை பூர்த்தி செய்வேன். கல்லும், முள்ளும் நிறைந்த குன்று, மலையில் ஏறி கரடுமுரடான காட்டுவழிப் பாதையில் வந்து, சத்தியமான 18 படி ஏறுபவர்களின் வாழ்க்கையில் படி ஏற்றி வைப்பேன். என் முன்பு கண்ணீர் சிந்துபவனை வாழ்க்கையில் கண்ணீர் சிந்த வைக்கமாட்டேன்.
எல்லா நிலையிலும் எனது பக்தருக்கு தாய், தந்தையாகவும், குருவாய், நண்பனாய், குழந்தையாய், தெய்வமாய் என அனைத்துமாய் இருப்பேன்’’ என ஐயப்பன் கூறிய உபதேசத்தையும், ஐயப்பன், அகத்தியர் கூறிய விரதமுறைகளையும் எடுத்துரைக்கிறார். இந்த இருமுடி என்பது, பரமாத்மாவுடன், ஜீவாத்மா கலப்பதாகும். அதாவது மனித ஆத்மாவானது, (மனித உடல், சிவனின் அம்சமாக கருத்தப்படும் முக்கண் உடைய தேங்காய்) தெய்வநிலையோடு (ஐயப்பன் மேனியில் பெருமாள் அம்சமுடைய நெய்) ஐக்கியமாவதை குறிப்பதாகும்.
ஆன்மா, இறைவனோடு ஐக்கியமாகி விட்டால், அதன் பிறகு இந்த மனித உடல் எரிந்து சாம்பல் ஆகிறது என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அந்த நெய் தேங்காயில் உள்ள நெய் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்தவுடன், முத்திரை தேங்காயை சாமிக்கு படைத்து (முக்கண் பகுதி துண்டு) அங்குள்ள அக்னி குண்டத்தில் (ஆழி தீ) எரிக்கப்பட்டு சாம்பல் ஆகிறது. இதுவே இருமுடியின் தத்துவம் என எடுத்துரைக்கிறார். சாமியே சரணம் ஐயப்பா
* நாளையும் தரிசிப்போம்
சபரிமலையில் நாளை
அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு
The post ஐயப்பன் அறிவோம் 39: இருமுடி appeared first on Dinakaran.