×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே மீனவர்களுக்கான வரிவிலக்கு டீசல் விற்பனை மையம்

*அமைச்சர் திறந்து வைத்தார்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் தமிழ்நாடு மாநில தலைமை மீனவள கூட்டுறவு இணையம் மற்றும் மீன்வளம், மீனவர் நலத்துறை இணைந்து அமைத்துள்ள மீனவர்களுக்கான வரிவிலக்கு அளிக்கப்பட்ட டீசல் விற்பனை மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலான டீசல், பெட்ரோல் விற்பனை நிலைய திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் கஜலெட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் தலைமையில், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், கருமாணிக்கம், முருகேசன் ஆகியோர் முன்னிலையில், மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், இப்பகுதியில் பெண்கள் கடற்பாசி வளர்க்கும் திட்டத்தை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக வளமாவூர் பகுதியில் ரூ.127.71 கோடியில் கடற்பாசி பூங்கா கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பாலைக்குடி அருகே 10 மீனவ கிராமத்தினர் பயன்பெறும் வகையில் முதல்வரின் உத்தரவுப்படி வரிவிலக்கு அளிக்கப்பட்ட டீசல் விற்பனை மையம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

முதல்வரால் ஏற்கனவே ராமேஸ்வரம் பகுதியில் மீனவர் மாநாடு நடத்தப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், மீனவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தங்கச்சிமடம், குந்துகால், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மீனவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு நீண்ட காலமாக பட்டா வழங்காமல் இருந்த நிலையில் முதல்வரின் நடவடிக்கையால் பட்டா வழங்கப்பட்டுள்ளன. இதுபோல மழைக்கால உதவித்தொகை ரூ.5,000 லிருந்து ரூ.8,000ஆக உயர்த்தி முதல்வர் வழங்கியுள்ளார். விசைப் படகுகளுக்கான மானிய விலை டீசல் ஆண்டுக்கு 18,000 லிட்டரில் இருந்து 19,000 லிட்டராகவும், நாட்டுப் படகுகளுக்கு 4,000 லிட்டரில் இருந்து 4,400 லிட்டராகவும், நாட்டுப் படகுகளுக்கான மானிய விலை மண்ணெண்ணெய் ஆண்டுக்கு 3,400 லிட்டரில் இருந்து 3,700 லிட்டராக உயர்த்தப்பட்டது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் மீனவர்களுக்கு ரூ.500 கோடிக்கு மேல் கடனுதவி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். மீன்பிடி தொழிலில் பாதிப்பின்போது மீனவர் குடும்பத்திற்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகையை ரூ.350ஆக உயர்த்தியுள்ளார் என்றார்.

தொடர்ந்து டாப்கோபெட் நிதி ஒருங்கிணைப்பு மென்பொருள் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கடற்பாசி இறக்குமதி தொடர்பாக மீன்வளம் மற்றும் மீளவர் நலத்துறை, ராஜீவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு நிலையம் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை அமைச்சர் துவக்கி வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு ரூ.59.50 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

விழாவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் இயக்குநர் ஆறுமுகம், மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, உதவி இயக்குநர் கோபிநாத், ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் சேர்மன் ராதிகா பிரபு, திமுக ஒன்றிய செயலாளர்கள் மோகன், கண்ணன், ராஜாராம் திருப்பாலைக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முகமது உமர் பாரூக், மீனவர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆர்.எஸ்.மங்கலம் அருகே மீனவர்களுக்கான வரிவிலக்கு டீசல் விற்பனை மையம் appeared first on Dinakaran.

Tags : R.S. Mangalam ,Minister ,Tamil Nadu State Chief Fishermen Cooperative Network ,Fisheries and Fishermen Welfare Department ,
× RELATED ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட...