மீனம்பாக்கம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று மதியம் வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் புறப்பாடு விமானங்கள் 3, வருகை விமானங்கள் 3 என மொத்தம் 6 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக, சென்னையில் இருந்து இன்று காலை 10.45 மணியளவில் திருவனந்தபுரம் செல்லும் விமானம், கர்நாடகாவின் சிலிகுரிக்கு மதியம் 12.35 மணியளவில் செல்லும் விமானம், கொல்கத்தாவுக்கு இரவு 10.40 மணியளவில் செல்லும் விமானம் ஆகிய 3 விமானங்களின் புறப்பாடு திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் திருவனந்தபுரத்தில் மதியம் 1.45 மணியளவில் சென்னை வரும் விமானம், சிலிகுரியில் இருந்து மாலை 6.10 மணியளவில் வரும் விமானம், கொல்கத்தாவில் இருந்து இரவு 10 மணியளவில் வரும் விமானம் என மொத்தம் 3 விமானங்களின் வருகையும் இன்று ஒரே நாளில் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தில் 3 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு என மொத்தம் ஏர்இந்தியா எக்ஸ்பிரசின் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் மழை வேகம் அதிகரிக்கும்போது, சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து, காலதாமதமாக இயங்குவது போன்றவை அதிகரிக்கலாம். எனவே, தாங்கள் பயணிக்க வேண்டிய விமானங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸ் நிறுவனங்களை தொடர்பு கொண்டு பயணிகள் தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு அவர்கள் சம்பந்தப்பட்ட விமானத்தின் வருகை, புறப்பாடு நேரங்களை அறிந்து, அதற்கு தகுந்தாற்போல் தங்களின் விமான பயணங்களை அமைத்து கொள்ள வேண்டும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
The post சென்னை விமான நிலையத்தில் மோசமான வானிலை காரணமாக இன்று ஒரே நாளில் 6 விமானங்கள் திடீர் ரத்து appeared first on Dinakaran.