×

ஓசூர் பகுதியில் நாய் தொல்லை இரவு நேர வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதி

*ஒளிரும் பட்டை அணிவிக்க கோரிக்கை

ஓசூர் : ஓசூர் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஓசூர் மாநகராட்சி தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாகும். இங்கு, குண்டூசி முதல் விமான உதிரி பாகங்கள் வரை தயாரிக்கப்படுகிறது. ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலானோர் இரவு நேர பணிக்கு சென்று வருகின்றனர். அப்போது, தெருக்களில் சுற்றித்தரியும் நாய்களால் அவதிக்கள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

இரவு நேரத்தில் வாகனங்களில் வேலைக்கு செல்லும்போது, தெரு நாய்கள் தொல்லையால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். விடாமல் துரத்தும் நாய்களிடமிருந்து தப்பிப்பதற்காக வாகனங்களை வேகமாக இயக்கும்போது, விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. நாய்களிடமிருந்து தப்பிக்க போய், விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. ஒரு சிலர் கை -கால்கள் முறிந்து காயமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் சுற்றித்திரிகின்றன.

நாய்கள் கூட்டமாக நின்று கொண்டு, வாகனங்களில் வருவோரை துரத்தி, துரத்தி கடித்து குதறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில், சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் வலம் வருகின்றன. தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் நாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.

இருள் சூழ்ந்த பகுதியில் தெரு நாய்கள் கூட்டமாக அலைவதால், அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. எனவே, எளிதாக அடையாளம் காணும் வகையில் நாய்களின் கழுத்தில் ஒளிரும் பட்டைகளை அணிவிக்க வேண்டும். ஓசூர் பகுதியில் தெருநாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அப்போது, நாய்களின் கழுத்தில் ஒளிரும் பட்டைகள் அணிவித்தால் இரவு நேரத்தில் அடையாளம் காண வசதியாக இருக்கும்.

இரவு நேரத்தில் தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் அல்லது வீட்டுக்கு வரும் தொழிலாளர்கள் ஒளிரும் பட்டையை கண்டு அந்த பக்கமாக செல்வதை தவிர்ப்பர். இதன் மூலம் விபத்துக்களை தடுக்கலாம். மேலும் கடிக்க வரும் நாய்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து ஐஎன்டியூசி தேசிய செயலாளர் மனோகரன் கூறுகையில், ‘ஓசூரில் இயங்கி வரும் பெரும்பாலான தொழிற்சாலைகளில் மூன்று ஷிப்டுகள் உள்ளன. தொழிலாளர்கள் இரவு நேர பணிக்கு செல்லும்போது, நாய் தொல்லையால் பல்வேறு இடையூறுகளை சந்தித்க்கின்றனர். நாய்களின் கழுத்தில் ஒளிரும் பட்டைகள் இருந்தால் அந்த பக்கமாக செல்வதை தவிர்த்து விடலாம். எனவே, மாநகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு ஒளிரும் பட்டை அணிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

The post ஓசூர் பகுதியில் நாய் தொல்லை இரவு நேர வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Hosur ,Hosur Corporation ,Kundusi ,Dinakaran ,
× RELATED ஓசூர் ஜூஜூவாடியில் வைக்கோல் ஏற்றி...