×

விழுப்புரத்தில் 10 நாட்களுக்குப் பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு: 7 அரசு பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல், மழை வெள்ளத்தினால் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. கடந்த ஒரு வாரத்திற்கு பின்பு படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது. முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகை, பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே ஒன்றிய அரசின் பல்துறை குழுவும் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளசேத மதிப்பீடு குறித்து ஆய்வு செய்துள்ளது. அவர்களிடம் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்களை பட்டியலிட்டு வழங்கியுள்ளனர்.

இதனிடையே பெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட அம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டு வந்தது. தற்போது நிலைமை சிறிது சீரடைந்திருக்கும் நிலையில் 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. மழைநீர் வடிந்து இயல்புநிலை திரும்பிய நிலையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வந்தனர். வெள்ளத்தில் புத்தகங்கள் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், இன்று அவை பள்ளியிலேயே வழங்கப்படும். மாவட்டத்தில் ஒரு மேல்நிலைப்பள்ளி உட்பட 7 அரசுப் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதை அடுத்து 7 பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சிறுமதுரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, மரக்காணம் ஒன்றியத்தில் ஓமந்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, நாரவாக்கம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கந்தாடு அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி, வண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கீழ்சித்தாமூர் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

The post விழுப்புரத்தில் 10 நாட்களுக்குப் பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு: 7 அரசு பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Viluppuram ,Viluppuram district ,Benchel ,
× RELATED விழுப்புரம் – திண்டிவனம் அருகே...