×

கண்ணாடி விரியன், நல்ல பாம்பு பிடிக்க ஒன்றிய அரசு அனுமதி

சென்னை: கண்ணாடி விரியன், நல்ல பாம்பு உள்ளிட்ட பாம்புகளை பிடிக்க மத்திய அரசு மனுமதி வழங்கியுள்ளதால், இருளர் பாம்பு பிடிப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த வட நெம்மேலி பகுதியில் இசிஆர் சாலையையொட்டி இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த சங்கம் தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில், செங்கல்பட்டு, சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

இவர்கள், நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை விரியன் உள்ளிட்ட பாம்பு வகைகளை பிடிக்கின்றனர். அவ்வாறு பிடித்து வந்த பாம்புகளை மண்பானையில் அடைத்து வைத்து, பின்னர் ஒவ்வொரு பாம்பாக வெளியே எடுத்து விஷம் எடுக்கப்படுகிறது. அப்படி எடுக்கப்படும் விஷம் கேன்சர், ரத்த கசிவு நிற்க, பாம்புக்கடி, நாய்க்கடி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.  பாம்பு பிடித்து வந்து கொடுக்கும் உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல பாம்புக்கு ரூ.2300, கண்ணாடி விரியனுக்கு ரூ.2300, கட்டு விரியனுக்கு ரூ.850, சுருட்டை விரியனுக்கு ரூ.300 என பணம் வழங்கப்படுகிறது.

விஷம் எடுத்த பின்பு 28 நாட்கள் கழித்து வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பாம்புகள் காட்டுப் பகுதியில் கொண்டு விடப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டு 13 ஆயிரம் பாம்புகள் பிடிக்க அனுமதி வழங்கி, கடந்த 5 மாதங்களில் 125 கட்டுவிரியன், 1053 சுருட்டை விரியன் என மொத்தம் 1178 பாம்புகள் மட்டுமே பிடிக்கப்பட்டு விஷம் எடுக்கும் பணிகள் நடைபெற்றது. இதனிடையே, நல்ல பாம்பு மற்றும் கண்ணாடி விரியன் பாம்புகளை பிடிக்க ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது.

இந்நிலையில், பாம்பு பிடி உறுப்பினர்கள் கோரிக்கைையை ஏற்று, ஒன்றிய அரசு, தற்போது அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பாம்பு பிடி உறுப்பினர்கள் கூறுகையில், ‘கடந்த 5 மாதங்களாக நல்ல பாம்பு, கண்ணாடி விரியன் பாம்புகளை பிடிக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்காமல் இழுத்தடித்தது. இதனால், போதிய வருமானம் இல்லாமல் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, பாம்புகளை பிடிப்பதற்கான அனுமதி கடிதம் தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கப் பெற்றதாக தெரிகிறது. இந்த வார இறுதியில் அனுமதி கடிதம் எங்களுக்கு கிடைக்கும். அதன்பிறகு, பாம்புகளை பிடிக்கும் பணி சூடு பிடிக்கும்,’ என்றனர்.

The post கண்ணாடி விரியன், நல்ல பாம்பு பிடிக்க ஒன்றிய அரசு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Union government ,CHENNAI ,central government ,Mamallapuram ,North Nemmeli ,ECR road ,Irular Snake Catchers Cooperative Society ,
× RELATED மும்மொழி கொள்கையை ஏற்றால் நிதியை அரை...