×

நெல்லையில் இரவு ரோந்து செல்லாமல் தியேட்டரில் ஹாயாக படம் பார்த்த ‘ஏசி’

நெல்லை: நெல்லையில் இரவு ரோந்து செல்லாமல் தியேட்டரில் ஹாயாக படம் பார்த்த உதவி கமிஷனரை மாநகர போலீஸ் கமிஷனர் ஓபன் மைக்கில் ‘டோஸ்’ விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) மூர்த்தி உத்தரவின் பேரில் நெல்லை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் விஜி, சிறுவர் உதவி போலீஸ் பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி, சந்திப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ஒவ்வொரு போலீஸ் நிலையப் பகுதியிலும் ஒவ்வொரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

இதுபோல் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ் தலைமையில் கங்கைகொண்டான் இன்ஸ்பெக்டர் வேல்கனி, நாங்குநேரி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மங்கையற்கரசி, உவரி இன்ஸ்பெக்டர் சிவகளை, கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கலா, சேரன்மாதேவி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி ஆகியோர் இரவு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்டம், மாநகரப் பகுதியில் இரவு பணியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்களே ஈடுபட்டனர்.

இந்நிலையில் நெல்லை சந்திப்பு அருகே உள்ள திரையரங்கில் இரவு காட்சியாக புஷ்பா 2 திரையிடப்பட்டு இருந்தது. அப்போது அந்த வழியாக நெல்லை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ரோந்து வந்துள்ளார். அவர் போலீஸ் வாகனத்தை வெளியே நிறுத்தி விட்டு அவர் தியேட்டருக்குள் சென்றதாக கூறப்படுகிறது. பல மணி நேரமாக உதவி கமிஷனர் கார் அங்கே நின்று இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, உதவி கமிஷனர் இரவு பணியை பார்க்காமல் தியேட்டரில் படம் பார்ப்பதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) மூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கமிஷனர் வாக்கி டாக்கியில் உதவி கமிஷனரை அழைத்தார்.

வாக்கி டாக்கியில் பேசிய உதவி கமிஷனர் செந்தில்குமார் தச்சநல்லூரில் சிலர் பிரச்னை செய்வதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்றதாக தெரிவித்து உள்ளார். ஆனால், போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) மூர்த்தி ‘‘மாநகர பகுதியில் பெண் இன்ஸ்பெக்டர்கள் இரவு பணியில் உள்ளனர். இரவில் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்கும் முக்கிய பொறுப்பில் உள்ள நீங்கள்தான் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இப்படி நடந்து கொண்டால் எப்படி குற்றச்செயலலை உங்களால் தடுக்க முடியும்.’’ என கடிந்து கொண்டாராம். இச்சம்பவம் நெல்லை மாநகர காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நெல்லையில் இரவு ரோந்து செல்லாமல் தியேட்டரில் ஹாயாக படம் பார்த்த ‘ஏசி’ appeared first on Dinakaran.

Tags : Nellai ,Municipal ,Commissioner ,Municipal Police Commissioner ,Murthy ,
× RELATED நெல்லை நீதிமன்றத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு..!!