×

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைகிறது 10ம் தேதிக்கு பிறகு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் 10ம் தேதிக்கு பிறகு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து 2 முறை காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகி மழை பெய்தது. ஒரு புயல் உருவாகி மேற்கு வங்கம் சென்றது.

அதற்கு பிறகு உருவான பெஞ்சல் புயல் மெல்ல நகரும் தன்மை கொண்டிருந்த காரணத்தால் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காரைக்கால் நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் எதிர்பாராத அளவுக்கு மழையை கொட்டத் தீர்த்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதற்கிடையே, தென்கிழக்கு வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்குப் பகுதியில் உருவான காற்றழுத்தம் மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள அந்த காற்றழத்த தாழ்வுப் பகுதி, மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று சற்று வலுவடையும். பின்னர் மேற்கு- வட மேற்கு பகுதியில் நகர்ந்து 11ம் தேதியில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இலங்கை- தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொள்ளும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

10ம் தேதியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும், மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 11ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் ஓரிரு இடங்களில், ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும். தவிரவும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

இதையடுத்து நாட்களில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராநாதபுரம் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி இருக்கும்.

The post காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைகிறது 10ம் தேதிக்கு பிறகு கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Southeast Bay of Bengal ,Indian Ocean ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மறு அறிவிப்பு வரும் வரையில்...