×

உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.8,365 கோடி ஆயுத உதவி: பைடன் நிர்வாகம் அறிவிப்பு

சிமி பள்ளத்தாக்கு: ரஷ்யாவுக்கு எதிராக போரிட உக்ரைனுக்கு மேலும் ரூ.8,365 கோடி ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய நிலையில் மூன்றாண்டுகளை கடந்தும் முடிவுறாமல் நீடிக்கிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு ஈரான் ஏவுகணை, ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட ஆயுத உதவிகளையும், வடகொரியா வெடிமருந்து உள்ளிட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றன. அதேசமயம் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன.

இதில் பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் போர் தொடங்கிய நாள்முதல் ரூ.5.37 லட்சம் கோடிக்கும் அதிகமான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பைடன் நிர்வாகம் அனுமதி வழங்கியது. அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக பதவி ஏற்க உள்ளார். டிரம்ப் நிர்வாகம் உக்ரைனுக்கு உதவிகளை வழங்குமா? அல்லது குறைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே உக்ரைனுக்கு வழங்க ஒதுக்கப்பட்ட நிதியை செலவிட பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து உக்ரைனின் ஆயுத பலத்தை அதிகரிக்கும் விதமாக மேலும் ரூ.8,365 கோடி நிதியை பைடன் நிர்வாகம் விடுவித்துள்ளது. இது ரஷ்யாவுக்கு எதிரான தீவிர தாக்குதலை நடத்தி வரும் உக்ரைன் ராணுவம் ஆளில்லா விமானங்கள், ஏவுகணைள், வெடிமருந்துகளை வாங்கவும், பராமரிக்கவும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.8,365 கோடி ஆயுத உதவி: பைடன் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : US ,Ukraine ,Biden administration ,Simi Valley ,Russia ,Dinakaran ,
× RELATED கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு...