கறம்பக்குடி, டிச.8: கறம்பக்குடியில் நகைக்காக பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி புளியஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் பைசூர்ரகுமான். இவரது மனைவி சகுபர்நிஷா (23). இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. 40நாட்களுக்கு முன் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து இலுப்பூரில் உள் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டு குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்தி வைத்த பிறகு கடந்த 2 தினங்களுக்கு முன்பு கணவர் வீடான கறம்பக்குடிக்கு வந்துள்ளார்.
அன்றிரவு மர்மமான முறையில் சகுபர்நிஷா கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்துப் பார்த்தமருத்துவர்கள் ஏற்கனவே சகுபர்நிஷா இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த கறம்பக்குடி போலீசார் கணவர் பைசூர்ரகுமானை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து 2 நாட்களாக விசாரணை செய்து வந்தனர். இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்ஐ மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை காவலர்களான அருணகிரி, செந்தில் ஆகியோர் மூலம் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.
சிசிடிவி கேமரா மற்றும் செல்போன் டவர் மூலம் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புளியஞ்சோலை பகுதியைச் சேர்ந்த முகமது யாகூப் மகன் முகமது அபுஉஸ்மான் (20) என்ற வாலிபர் நகைக்காக சகுபர் நிஷாவை கத்தியால் குத்தி கொலை செய்து உறுதியானது. அதையடுத்து நேற்று மாலை அவனை கைது செய்த போலீசார் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் ஒன்றரை பவுன் நகைக்காக பெண்ணை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post கறம்பக்குடியில் கத்தியால் குத்தி பெண் கொலை’ appeared first on Dinakaran.