- திருவண்ணாமலை தீபத்திருவிழா 4ம் நாள் உற்சவம்
- மடா
- வீதி
- அண்ணாமலையார்
- பவானி
- பஞ்சா முர்திஸ்
- திருவண்ணாமலை
- கார்த்திகை தீபத்திருவிழா
- சந்திரசேகர்
- அண்ணாமலை
- கார்த்திகா தீபத்ரி திருவிழா
- திருவண்ணாமலை
திருவண்ணாமலை, டிச.8: கார்த்திகை தீபத்திருவிழாவின் 4ம் நாளான நேற்று தங்க நாக வாகனத்தில் சந்திரசேகரரும், வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனிவந்து அருள்பாலித்தனர். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4ம் நாள் உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் காலை 10.25 மணி அளவில் உற்சவர் புறப்பாடு நடந்தது. திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட விநாயகர், சந்திரசேகரர் திட்டிவாசல் வழியாக ராஜகோபுரம் எதிரில் எழுந்தருளினர். பின்னர், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், தங்க நாக வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பாரம்பரிய உடல்இசை வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தியடி காலை உற்சவம் நடந்தது.
அதைத்தொடர்ந்து, இரவு 9 மணியளவில் இரவு உற்சவம் தொடங்கியது. ராஜகோபுரம் எதிரே அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ ‘உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என பக்திப்பெருக்குடன் முழக்கமிட்டனர். பின்னர், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், பிரமாண்டமான வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், வெள்ளி காமதேனு வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி இந்திர விமானத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நள்ளிரவு வரை நீடித்த சுவாமி திருவீதியுலாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, கல்யாணசுந்தரரேஸ்வரர் சன்னதி அருகில் உள்ள மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவும், திருக்கோயில் கலையரங்கத்தில் பரதநாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
The post வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையார் பவனி பஞ்சமூர்த்திகளை தரிசிக்க மாடவீதியில் திரண்ட பக்தர்கள் திருவண்ணாமலை தீபத்திருவிழா 4ம் நாள் உற்சவம் appeared first on Dinakaran.