×

வெளிநாடுகளில் வேலை என கூறி இந்தியர்களை சைபர் குற்றங்களை நடத்த பயன்படுத்துகிறார்கள்: தமிழக சைபர் குற்ற கூடுதல் டிஜிபி எச்சரிக்கை; மோசடி வேலைக்கு தமிழர்களை அனுப்பிய 3 பேர் கைது

சென்னை: ஐரோப்பிய நாடான செர்பியாவில் சமையல் உதவியாளர் பணி இருப்பதாக சென்னையை சேர்ந்த அப்துல்காதர், ஆண்டனி மற்றும் ஷோபா ஆகியோர் விளம்பரம் செய்துள்ளனர். இதை அறிந்த மேற்குவங்கத்தை சேர்ந்த சங்கர் சர்கார் என்பவர், அந்த வேலைக்காக ரூ.3 லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்து, சுமார் ஒரு வருடமாக காத்திருந்துள்ளார். பின்னர், 2022ம் ஆண்டு லாவோஸ் நாட்டின் டிரைஆங்கில் பகுதியில் வேலை இருப்பதாக கூறி, சங்கர் சர்காரை அங்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சீன நிறுவனத்தில் அவர் 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நிலையில், எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரின் அறிமுகம் அவருக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், சீன நிறுவனத்தில் சைபர் மோசடி வேலை செய்வதற்கு ஆட்களை கொண்டுவந்தால், கமிஷன் வழங்குவதாக சங்கர் சர்காரிடம் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட சங்கர் சர்கார், சென்னையை சேர்ந்த அப்துல்காதரை தொடர்பு கொண்டு அவரிடம் தெரிவித்துள்ளார். அப்துல்காதர், திருச்சியை சேர்ந்த தனது நண்பரான ஏஜென்ட் சையது என்பவரை தொடர்பு கொண்டு, டேட்டா என்ட்ரி வேலை என கூறி 9 பேரை லாவோஸ் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து, அங்கு 5 பேரிடம் மட்டும் குடியேற்ற அனுமதிக்காக எனக் கூறி அவர்களிடம் இருந்து மொத்தம் ஆயிரம் டாலரை சங்கர் சர்கார் வசூல் செய்துவிட்டு, அவர்களை ஜேம்ஸிடம் ஒப்படைத்து, அவரிடமிருந்து 2 ஆயிரம் சீன கரன்சிகளை கமிஷன் தொகையாக பெற்றுள்ளார்.

பின்னர், ஜேம்ஸ் அவர்களை கட்டாயப்படுத்தி, சைபர் மோசடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துள்ளார். இந்நிலையில், இதில் பாதிக்கப்பட்ட சேலத்தை சேர்ந்த அருண் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சையது, அப்துல்காதர் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, சங்கர் சர்காரை தேடி வந்த நிலையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. கடந்த 3ம் தேதி லாவோஸ் நாட்டிற்கு செல்ல முயன்ற அவரை கொல்கத்தா விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து தமிழக சைபர் குற்ற கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் வெளியிட்டுள்ள அறிக்கை: வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்துக்கோ அல்லது தங்களின் நாட்டிற்கோ வரவழைத்து, அவர்களை ‘சைபர் க்ரைம்’ உள்ளிட்ட குற்றச் செயல்களில் சிலர் ஈடுபடுத்துகின்றனர். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் ‘சைபர் அடிமைகள்’ என்று வகைப்படுத்தப்படுகிறார்கள். இப்படி, தற்போது சைபர் அடிமைத்தனம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இருந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் டேட்டா என்ட்ரி மற்றும் கால்சென்டர்கள் போன்ற வேலைகளுக்கு அங்கீகரிக்கப்படாத மனிதவள ஏஜென்சிகளால் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. அந்த நாட்டு சைபர் மோசடி பேர்வழிகள், இவர்களை இந்தியாவில் சைபர் குற்றங்களை நடத்தப் பயன்படுத்துகிறார்கள்.

இது மாதிரியான அங்கீகரிக்கப்படாத ஆட்சேர்ப்பு ஏஜென்சிகளுக்கு எதிராக பல புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதைதொடர்ந்து அங்கீகரிக்கப்படாத ஆட்சேர்ப்பு முகவர்களுடன் தொடர்புடைய பல சமூக ஊடக இணைப்புகள், இணையதளங்களை அரசு முடக்கி வருகிறது. எனவே, இதுபோன்ற மோசடிகளில் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம். விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், இதுபோன்ற மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலை சந்தித்திருந்தால், சைபர் குற்றப் பிரிவின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-ஐ அழைத்து அதில் புகார் தெரிவிக்கலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post வெளிநாடுகளில் வேலை என கூறி இந்தியர்களை சைபர் குற்றங்களை நடத்த பயன்படுத்துகிறார்கள்: தமிழக சைபர் குற்ற கூடுதல் டிஜிபி எச்சரிக்கை; மோசடி வேலைக்கு தமிழர்களை அனுப்பிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Indians ,Tamil Nadu ,Chennai ,Abdulkadar ,Antony and ,Shoba ,Serbia ,Shankar Sarkar ,West Bengal ,
× RELATED விசா இல்லாமல் இந்தியர்கள் 26...