* வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளை அடகு வைத்து கொலைக்கான கூலி ரூ9.60 லட்சம் கொடுத்தது அம்பலம்
அவிநாசி: கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் வாக்கிங் சென்ற தொழிலதிபரை, 28 வயது காதலனுடன் சேர்ந்து கூலிப்படை ஏவி 44 வயது மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசிகவுண்டம்புதூர் தாமரை கார்டனை சேர்ந்தவர் ரமேஷ் (48). டூவீலர் மற்றும் கார்கள் வாங்கி விற்கும் தொழில் மற்றும் அசையா சொத்துகளின் ஆவணங்களை பெற்றுக் கொண்டு வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் ஆகியவற்றை செய்து வந்தார். இவருக்கு விஜயலட்சுமி (44) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ரமேஷ் கடந்த 1ம் தேதி அதிகாலை கோவை-சேலம் ஆறு வழிச்சாலையையொட்டி செல்லும் மங்கலம் சர்வீஸ் சாலையில் வாக்கிங் சென்றார். அப்போது, காரில் வந்த மர்ம கும்பல் ரமேஷை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொன்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். கொலை நடந்த பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது ரமேஷை ஒரு கும்பல் காரில் பின் தொடர்ந்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொலை செய்து விட்டு தப்பியது தெரிய வந்தது. இதில், தொடர்புடைய கோபாலகிருஷ்ணன் (35), அஜீத் (27),சிம்போஸ் (23),சரண் (24), ஜெயபிரகாஷ்(45), ஆகிய 5 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த கும்பலிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இந்த கொலை சம்பவம் குறித்து அவிநாசி போலீஸ் டி.எஸ்.பி., சிவகுமார் கூறியதாவது: ரமேஷூக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
தொழிலதிபர் ரமேஷின் வீடு இருக்கும் பகுதிக்கு அருகிலேயே காசி கவுண்டன்புதூரை சேர்ந்த சையது இர்பான் (28), என்பவர் சிப்ஸ் கடை வைத்துள்ளார். இந்த சிப்ஸ் கடைக்கு விஜயலட்சுமி அடிக்கடி சென்று வந்தார். அப்போது விஜயலட்சுமிக்கும், இர்பானுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. விஜயலட்சுமியுடன் சையது இர்பானுக்கு மூன்று ஆண்டுகள் முன்பு தொடர்பு ஏற்பட்டது. கணவன் அன்பாக இல்லாததால் விஜயலட்சுமி இர்பானுடன் நெருங்கி பழகினார். ரமேஷ் வெளியூர் சென்றிருந்த நேரங்களில் இர்பானை வீட்டிற்கு அழைத்து விஜயலட்சுமி உல்லாசமாக இருந்து உள்ளார். இந்த விவகாரம் ரமேஷூக்கு தெரியவர மனைவியை கண்டித்து உள்ளார்.
ரமேசுக்கு, சில பெண்களுடன் தொடர்பு இருப்பது விஜலட்சுமிக்கு தெரிய வந்தது. மேலும் ரமேஷ் மது குடித்துவிட்டு மனைவிக்கு ‘செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்தும், அடித்தும் துன்புறுத்தியுள்ளார்.
இதனால் ரமேஷை கொலை செய்ய விஜயலட்சுமி திட்டுமிட்டு இர்பானிடம் தெரிவித்தார். அவர் தனது நண்பர் அரவிந்த் (எ) ஜானகி ராமன்(27) இருக்கிறார். அவர் கூலிப்படை மூலம் கொலை செய்து விடுவார். இதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று இர்பான் கூறி உள்ளார். உடனே விஜயலட்சுமி வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளை இர்பானிடம் கொடுத்து உள்ளார். அவர் அவிநாசியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ9.60 லட்சத்தை பெற்றுள்ளார். இதையடுத்து ஜானகிராமன் 5 பேர் கூலிப்படையை ஏற்பாடு செய்து உள்ளார். கடந்த டிச.1ம் தேதி அதிகாலை தொழிலதிபர் ரமேஷ் வீட்டில் இருந்து வாக்கிங் செல்ல புறப்பட்டுச்சென்ற தகவலை, விஜயலட்சுமி உடனடியாக சையது இர்பானிடம் கூறியுள்ளார்.
இர்பான் ஏற்பாடு செய்திருந்த கூலிபடையினர் 5 பேர் வீச்சரிவாள், கத்தியுடன் ஏற்கனவே காரில் தயாராக இருந்தனர். இதைத்தொடர்ந்து மங்கலம் ரோடு சர்வீஸ் சாலையில் நடந்து வந்த தொழிலதிபர் ரமேசை அந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலைசெய்து விட்டு தப்பி சென்றுள்ளனர் இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து ரமேஷின் மனைவி விஜயலட்சுமி, கள்ளக்காதலன் சையது இர்பான், கூலிப்படை ஏற்பாடு செய்து கொடுத்த ஜானகிராமன் ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையிலடைத்தனர்.
The post கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்; 28 வயது காதலனுடன் சேர்ந்து கூலிப்படை ஏவி தொழிலதிபரை தீர்த்துக்கட்டிய 44 வயது மனைவி appeared first on Dinakaran.