×

மாணவர்கள் பன்மொழி திறமையை வளர்த்தால்தான் இந்தியா முழுவதும் முழுமையாக சேவை ஆற்ற முடியும்: சென்னையில் வெங்கய்யா நாயுடு பேச்சு


சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் 20வது ஆண்டு விழா நேற்று நடந்தது. அகாடமியின் நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி சங்கர் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: நான் தமிழ்நாட்டில் நின்று கொண்டுதான் சொல்கிறேன், இந்தி படியுங்கள். குழந்தைகளுக்கு இந்தி கற்க உதவுங்கள். தேசிய அளவில் அது அவர்களுக்கு உதவும். இந்தி எதிர்ப்பு போராட்டம் எங்கள் நெல்லூரிலும் நடந்தது. நானும் கலந்துகொண்டேன். ரயில் நிலையத்திலும், தபால் நிலையத்திலும் இந்தி எழுத்துகளை தார்பூசி அழித்தோம்.

பிற்காலத்தில் பாஜ தேசிய தலைவர் ஆனபோது தான் புரிந்து கொண்டேன். தேசிய தலைவராக இருக்கும் போது இந்தியில் உரையாட முடியவில்லை என வருந்தினேன். 2% மக்களுக்கும் மட்டுமே ஆங்கிலம் புரியும், இந்தி மட்டுமல்ல முடிந்த வரை பல இந்திய மொழிகளை கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். எங்கு சென்றாலும் நேர்மையுடன் லஞ்சம் வாங்காமல் பணியை செய்ய வேண்டும். ஒரு அதிகாரியாக அரசியலை புறந்தள்ளி மனசாட்சியையும், அரசியலமைப்பு சட்டத்தை மட்டும் மனதில் வைத்து பணியாற்றுங்கள். மாணவர்கள் அனைவரும் பன்மொழி திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் இந்தியா முழுவதும் தங்களது சேவைகளை முழுமையாக ஆற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய அரசின் முன்னாள் டிஎஸ்சி செயலாளர் டி.ராமசாமி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் ஜி.ஏ.ராஜ்குமார், மச்சேந்திரநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post மாணவர்கள் பன்மொழி திறமையை வளர்த்தால்தான் இந்தியா முழுவதும் முழுமையாக சேவை ஆற்ற முடியும்: சென்னையில் வெங்கய்யா நாயுடு பேச்சு appeared first on Dinakaran.

Tags :
× RELATED கல்லூரிகளுக்கான கல்வி உதவித் தொகை...