அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, கோயம்பேடு துணை ஆணையர் சுப்புலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் கோயம்பேடு மார்க்கெட், நெற்குன்றம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் கல்லூரிகள் அருகே ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது, மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற இருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், நெற்குன்றம் மேட்டு குப்பம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தீனா (எ) கோபாலகிருஷ்ணன் (24), விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி திருநாவுக்கரசு (23) என்பது தெரிந்தது. இவர்கள், மும்பை மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து மொத்தமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்றது தெரிந்தது.
இதில் கிடைத்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 300 போதை மாத்திரைகள், ஒரு கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இதில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் வண்ணாரப்பேட்டை பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது போதை மாத்திரை பயன்படுத்திய வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கொடுத்த தகவலின்படி, போதை மாத்திரை விற்பனை செய்த குன்றத்தூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (24), சூரிய பிரகாஷ் (23), போரூர் கெருகம்பாக்கத்தை சேர்ந்த ஆகாஷ் ராஜா (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3700 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 பேரை புழல் சிறையிலும், சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.
The post கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்த 2 பேர் கைது appeared first on Dinakaran.