பூந்தமல்லி: திருவேற்காட்டில் ரூ.3.10 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் நாசர் நேற்று தொடங்கி வைத்தார். திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி பகுதியில் பருத்திப்பட்டு வரை பூந்தமல்லி ஆவடி சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனால் அந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அமைச்சர் நாசர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் உடனடியாக புதிய சாலை அமைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த சாலை அமைக்கும் பணியினை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி திருவேற்காடு காடுவெட்டி பகுதியில் நேற்று காலை நகர மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர் சா.மு.நாசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய சாலை அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆவடி மேயர் உதயகுமார், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ், மாணவர் அணி துணைச் செயலாளர் ஜெரால்டு, திருவேற்காடு நகர திமுக நிர்வாகிகள் இளையராஜா, ஜெகன், கெஜா, குமார், நரேஷ், நாராயணன், ராஜு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post திருவேற்காட்டில் ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை: அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.