×

விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு; இந்தியா முழவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன.! துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளையும், பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய விழாவில் உரையாற்றினார். அவர் பேசியதாவது; இன்றைக்கு சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று அவருடைய திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு இந்த சிறப்பான நிகழ்ச்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வலியுறுத்தியபடி எல்லா தரப்பு மக்களுக்குமான அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைய தினம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நம்முடைய முதலமைச்சர் தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர்களாக ஆக்கிடும் வகையில், தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 100 தூய்மைப் பணியாளர்களுக்கு கழிவு நீரகற்று இயந்திரங்களை மானியத்துடன் வழங்கியிருக்கின்றார்கள்.

அதேபோல, தமிழ்நாடெங்கும் எல்லா மாவட்டங்களிலும், எல்லா அமைச்சர்களும் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கின்றார்கள். அந்த வகையில், இன்றைய தினம் இந்த நிகழ்ச்சியில் இங்கே 230 தூய்மைப் பணியாளர்களுக்கு 700 Safety kits உபகரணங்களை நாம் வழங்க இருக்கின்றோம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாநகராட்சியையும், நகராட்சியையும், ஊராட்சிகளையும், அழகாக பராமரிக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை அழகாக்க நம்முடைய திராவிட மாடல் அரசு என்றைக்கும் துணை நிற்கும். இன்றைக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு 364 எண்ணிக்கையிலான ‘கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்’ வழங்குகின்றோம். 7 ஆயிரத்து 200 பயனாளிகளுக்கு 38 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பொருள்களை நாங்கள் வழங்கயிருக்கின்றோம். ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு நான் பலமுறை வந்திருக்கின்றேன். கழகத்தின் இளைஞர் அணி செயலாளராக வந்திருக்கின்றேன். சட்டமன்ற உறுப்பினராக வந்திருக்கின்றேன். விளையாட்டுத் துறை அமைச்சராக வந்திருக்கின்றேன். ஆனால், இன்றைக்கு முதல் முறையாக துணை முதலமைச்சராக பொறுப்பேற்று உங்களுடைய வாழ்த்துகளை எல்லாம் பெற நான் வந்திருக்கின்றேன்.

உங்களுக்குத் தெரியும். 3 நாட்களுக்கு முன்பு ஃபெஞ்சல் புயல் கன மழை காரணமாக, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில், பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, சேதங்கள் தவிர்க்கப்பட்டு இருந்தன. அதனால் தான், இன்றைக்கு இந்த நிகழ்ச்சி இவ்வளவு மகிழ்ச்சியோடு. சீரும், சிறப்புமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்ற நம்முடைய இராணிப்பேட்டை மாவட்ட அமைச்சர் அண்ணன் காந்தி அவர்களுக்கும். மாவட்ட நிர்வாகத்துக்கும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை. ஊரக வாழ்வாதார இயக்கம் உள்பட அனைத்து துறைகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கிராமப்புறத்திலிருந்து நிறைய விளையாட்டு வீரர்கள் வரவேண்டும் என்று தான் இந்த கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் கொடுத்திருக்கிறோம். இன்றைக்கு இராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இந்த ஸ்போர்ட்ஸ் கிட் கொடுக்கின்றோம். இராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து ஏராளமான வீரர்கள், வீராங்கனையர் உருவாகி வருகிறார்கள். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை தங்கை யாஷினி இங்கே வருகை தந்திருக்கிறார்கள். இவர் Asian Junior & Cadet Championship. All India Inter Institutional championship, All India Inter University, Khelo University games, இப்படி பல சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று இதுவரை 47 பதக்கங்களை ஜெயித்திருக்கிறார். தனது வெற்றிகளின் மூலம், தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தங்கை யாஷினியின் வெற்றிப்பயணம் தொடர நாம் அனைவரும் சேர்ந்து வாழ்த்துவோம். அவருடைய பெற்றோரையும், கோச்சர்களையும் நாம் வாழ்த்துவோம்.

அதே போல, இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் தம்பி அஜீத் இங்கே இருக்கிறார். Senior Common Wealth Championship 2023ல் தங்கப்பதக்கம் -7 முறை National Champion பட்டம் என ராணிப்பேட்டை மாவட்டத்தின் பெருமையாக உயர்ந்து நிற்கும் தம்பி அஜீத் அவர்களுக்கும் நாம் அனைவரும் சேர்ந்து வாழ்த்துகளை தெரிவிப்போம். அதேபோல, அவருடைய பெற்றோரையும், கோச்சர்களையும் நாம் வாழ்த்துவோம். விளையாட்டில் சாதிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில், உயரிய ஊக்கத் தொகை, தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேசன் மூலமாக நிதி உதவி கொடுக்கிறோம். அதுமட்டுமல்ல, அரசுப் பணியில் 3 சதவீத இடஒதுக்கீடு என இந்த முறை சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறோம். குறைந்தது 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை தருவோம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். விரைவில் முதலமைச்சர் கையால் அந்த 100 விளையாட்டு வீரர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வோம்.

நம்முடைய அரசு எடுக்கிற பல்வேறு முயற்சிகளுக்கு இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. சென்ற வாரம் கூட புதுடில்லியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. FICCI India Sports Award 2024 நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிற்கு ஒரு விருது கொடுத்திருக்கிறார்கள். என்ன விருது என்றால், Best State Promoting Sports விளையாட்டை ஊக்குவிக்கின்ற சிறந்த மாநிலம் என்று தமிழ்நாட்டிற்கு ஒரு உயரிய விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்ற வருடம், இதே போல, மிகப் பிரபலமான பத்திரிகை The Hindu SportStar மற்றும் CII Sports Business Award லும் தமிழ்நாட்டுக்கு விளையாட்டை ஊக்குவிக்கின்ற சிறந்த மாநிலம் என்று விருதுகள் கிடைத்திருக்கிறது. படிக்காமல் சாதித்த ஒருவரை யாராவது எடுத்துக்காட்டாக கூறினால், அதற்கு இணையாகப் படித்துச் சாதித்த லட்சம் பேரை காட்டுகிறேன் என்று தமிழ்நாட்டில் கல்வியை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறது நம்முடைய திராவிட மாடல் அரசு.

உங்கள் பிள்ளைகளை காலையில் உணவு கொடுத்து வகுப்பறைக்கு அனுப்புகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு. அதே போல, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலமாக அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி செல்கின்ற மாணவிகள், மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகை வழங்குகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு. இந்த மாதிரியான திட்டங்கள் தான் திராவிட மாடலின் தனித்தன்மை. யார் யாருக்கு என்ன தேவை என்று பார்த்து அதை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செய்து கொண்டு வருகிறார்கள். அப்படி ஒரு வரலாறு தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அன்றைக்கு போட்ட விதை. தமிழ்நாட்டுப் பெண்கள் பொருளாதாரத்திற்கு யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது என்று உங்களுக்காக உருவாக்கப்பட்டது தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள். இன்றைக்கு இங்கே இருக்கின்ற நீங்கள் எல்லோரும் தலை நிமிர்ந்தும், உங்களை சுயமரியாதையுடனும் வாழ வைத்துள்ள மண் நம்முடைய தமிழ்நாட்டு மண். பெரியார் கண்ட கனவை கலைஞர் சாத்தியப்படுத்தினார்.

இதுவரை நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்தது முதல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 92 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இலட்சக்கணக்கான மகளிரின் வாழ்க்கைத் தரத்தை இந்த திராவிட மாடல் அரசு உயர்த்தி இருக்கிறது. இன்றைக்கு உங்களுக்கு அரணாக, பாதுகாப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார்கள், என்றைக்கும் அவர் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார். இன்றைக்கு உங்களுடைய சுயமரியாதையை மேலும் அதிகரிக்கும் விதமாக தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தருகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு. மகளிர் நீங்கள் உயர்ந்தால்தான் ஒட்டுமொத்த சமூதாயமே உயரும். அந்த நோக்கில், இன்றைக்கு 3000 மகளிருக்கு 30 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக்கடன் இணைப்பை கொடுத்திருக்கின்றோம். இந்த கடன் இணைப்பின் மூலம் மகளிர் நீங்கள் வாழ்க்கையில் மேலும், மேலும் உயரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதற்கு என்றைக்கும் உங்களுடைய வீட்டுப்பிள்ளையாக நான் துணை நிற்பேன். இங்கே நிறைய மாற்றுத்திறனாளிகள் வந்திருக்கிறீர்கள்.

ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் நான் நினைவு கூற விரும்புகின்றேன். நம்முடைய ஆட்சி அமைந்து சில நாட்களில், ஒரு நாள் தலைமைச் செயலகத்தில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் கோரிக்கைகள் அளித்தவர்களுக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நலத்திட்டங்களை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது சென்னை தரமணியைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் சக்திவேலும் அவருடைய மனைவி தனலட்சுமியும், அவர்களுடைய மகன் சஜீத்தை அங்கே அழைத்துக் கொண்டு வந்தார்கள். அப்போது சஜீத் நான்காவது படித்துக் கொண்டு இருந்தார். பிறவியிலேயே செவித்திறன் மாற்றுத்திறனாளியான சஜீத்தின் காதில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் காதொலி கருவியைப் பொருத்தி விட்டார்கள்.

காதொலி கருவியால் சத்தத்தை முதன்முதலில் கேட்ட சஜீத்.. மகிழ்ச்சியில் நம்முடைய முதலமைச்சரை பார்த்து தன்னை மறந்து சிரித்தார். அந்த சிரிப்பு தான் நம்முடைய திராவிட மாடல் அரசின் வெற்றி. சஜீத் இன்றைக்கு 7 ஆவது படிக்கிறார். இந்த மாதிரி நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் நம்முடைய திராவிட மாடல் அரசு தந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம். செயற்கை கால் போன்ற உதவிகளையும் நாம் இங்கே வழங்க இருக்கின்றோம். இவையெல்லாம் அரசின் கடமையாக கருதி, நேரடியாக நாங்களே உங்களை தேடி வந்து உங்கள் கைகளில் சேர்க்கிறோம். இவை மட்டுமில்லாமல் ஒவ்வொரு சாமானியரின் கோரிக்கையும் அரசிற்கு முக்கியம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், நானும் தமிழ்நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளுக்கான நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடு கட்ட ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது. வீடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு வீட்டு மனை பட்டாவும் மிக முக்கியம். அதனால் தான் இன்றைக்கு இங்கே 700 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை கொடுத்திருக்கிறோம். அதைப் பெற வந்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். திராவிட மாடல் என்றால் என்னவென்று சிலர் கேட்கிறார்கள்.

‘எல்லாருக்கும் எல்லாம்’ என்பதுதான் நம் திராவிட மாடல். அதன்படி, ஆட்சிக்கு வந்ததும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் போட்ட முதல் கையெழுத்தே உங்களுக்குத் தெரியும். மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து, விடியல் பயண திட்டம் தான். இந்த மூன்று வருடத்தில் இந்த கட்டணமில்லா விடியல் பயண திட்டத்தின் மூலமாக சுமார் 580 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு மகளிரும் அந்தத் திட்டத்தின் மூலம் மாதம் 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரைக்கும் சேமிக்கிறார்கள். இந்தியாவையே திரும்பி பார்க்கிற வகையில், மற்றொரு திட்டம் என்னவென்றால், அது கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தான். இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும், ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் மாதம் 1000 ரூபாய் பெற்று வருகிறார்கள். இப்படி மகளிர் நீங்கள் வளர்ந்தால், மாநிலம் உயரும் என்று தான் இந்த திட்டங்களை எல்லாம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தீட்டி, அவற்றை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த மேடையில் கூட. சுய உதவிக் குழுக்களுக்கு கடன் இணைப்புகள் வழங்கப்பட இருக்கிறது. அதனை நம்முடைய முதலமைச்சர், மகளிருக்கு கொடுக்கக்கூடிய கடன் தொகையாக பார்க்கவில்லை. உங்களுடைய உழைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கைத் தொகையாகத்தான் நம்முடைய முதலமைச்சர் அந்த கடன் தொகையை பார்க்கிறார்கள். திராவிட மாடல் அரசை பொறுத்தவரை, எப்போதும் மக்களோடு மக்களாக கைகோர்த்து நிற்கின்ற ஒரு அரசு. நம்முடைய முதலமைச்சர் உங்களுடைய குடும்பத்தில் ஒருவராக என்றும் உங்களுக்குத் துணை நிற்பார்கள் என்று கூறிக் கொண்டு இங்கு வந்திருக்கும் அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து விடைபெறுகிறேன் என தெரிவித்தார்.

The post விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு; இந்தியா முழவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன.! துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Deputy Chief Minister of ,Udhayanidhi Stalin ,Iranipet district ,Annal Ambedkar ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து...