×

100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கான சாவிகளை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

சென்னை: தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னதத் திட்டத்தின் கீழ் 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் கடனுதவிக்கான ஆணைகள், தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், நரிக்குறவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (6.12.2024) சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னதத் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு 213 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கிடும் முதற்கட்டமாக 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை வழங்கினார். மேலும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகளையும், 100 தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும், 30 நரிக்குறவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.

தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னதத் திட்டத்தின் கீழ் நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்குதல் சென்னை குடிநீர் வாரியத்தால் பழைய பகுதிகளில் 2494 கிலோ மீட்டர் நீளத்திற்கும் மற்றும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் 1659 கிலோ மீட்டர் நீளத்திற்கும் கழிவுநீர் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பழைய சென்னை பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் கட்டமைப்பில் 50 விழுக்காடு மேற்பட்டவை, 40 முதல் 50 வருடங்கள் பழமையானது. இந்த கழிவுநீர் கட்டமைப்புகள் சென்னை குடிநீர் வாரியத்தால் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலையினை மாற்றி சென்னை பெருநகரில் உள்ள கழிவுநீர் அகற்றும் கட்டமைப்புகளின் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் தொடர்ந்து இயந்திரமயமாக்கியுள்ளது. இதனடிப்படையில், கழிவுநீர் கட்டமைப்பின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 539 இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும், புதியதாக 58 கழிவுநீர் பராமரிப்பு இயந்திரங்களை 28 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 12.08.2024 அன்று சென்னை குடிநீர் வாரியத்திற்கு வழங்கப்பட்டது. இவ்வியந்திரங்களை இயக்குவதற்கும், கழிவுநீர் கட்டமைப்புகளை பராமரிப்பதற்கும் 728 நிரந்தர மற்றும் 1489 ஒப்பந்த பணியாளர்கள் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணியாளர்கள் பல ஆண்டு காலமாக கழிவுநீர் கட்டமைப்புகளை பராமரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். மேலும், இவர்களின் வாரிசுதாரர்களும் இதே பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையை மாற்றுவதற்கும் இவர்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்துவதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை குடிநீர் வாரியம், தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்க அமைப்புடன் (DICCI) இணைந்து இவர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற உன்னதத் திட்டத்தினை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் 28.02.2023 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை குடிநீர் வாரியம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களான 39 நபர்கள், 48 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 126 வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிதிராவிடர் / பழங்குடியினருக்கு முன்னுரிமை கொடுத்து, மொத்தம் 213 நபர்களுக்கு நவீன இயந்திரங்கள் வழங்கி இவர்களை தொழில் முனைவோர்களாக மேம்படுத்த 27.12.2023 அன்று பணி ஆணைகள் வழங்கப்பட்டது. இவ்வகையான நவீன கழிவுநீரகற்று இயந்திரங்கள் பெறுவதற்காக அண்ணல் அம்பேத்கர் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் சிறப்பு நிகழ்வாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 50 விழுக்காடு மானியம் வழங்கி, மொத்தம் 213 நபர்களுக்கு கடன் உதவி மற்றும் மானியம், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 8.3.2024 அன்று வழங்கப்பட்டது.

சென்னை குடிநீர் வாரியத்தில் இத்திட்டத்தின் வாயிலாக பணியாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்ச வருமானமாக தலா 50 ஆயிரம் ரூபாய் என 7 ஆண்டுகளுக்கு உறுதிசெய்யப்படும். இப்பணிகளுக்காக 500 கோடியே 24 இலட்சம் ரூபாய் நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் இந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வருமானம் உறுதி செய்யப்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரத்தையும், சமுதாய கௌரவத்தையும் மேம்படுத்த இந்த சிறப்பு திட்டம் வழிவகுத்துள்ளது. இப்பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் முறையான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வாரியத்தில் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கடன் திட்டம் போன்றவை தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பதினருக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னதத் திட்டத்தின் கீழ், தூய்மைப் பணியாளர்களுக்கு 213 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை வழங்கிடும் முதற்கட்டமாக 100 தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கான சாவிகளை வழங்கி, அவ்வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் கடனுதவிகள் வழங்குதல் சமூக நீதி மற்றும் சமத்துவ வளர்ச்சிக்கான முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாடு, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” 2023-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் ஓர் உன்னதமான திட்டமாகும். இத்திட்டத்திற்கான தொழில் முதலீட்டில் 35 சதவீதத் தொகையை மானியமாகவும் 65 சதவீதத் தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீதத் தொகையை வட்டி மானியமாகவும் அளிக்கிறது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார். தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்குதல் தூய்மைப் பணியாளர்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் 100 தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை வழங்கிடும் அடையாளமாக 5 தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.

நரிக்குறவர்களுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்குதல் திருவான்மியூரில் தற்காலிக வீட்டில் வசித்து வரும் தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களாக உள்ள நரிக்குறவர்கள் 30 நபர்களுக்கு முழு மானியத்துடன் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் 5 நரிக்குறவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் கு. செல்வப்பெருந்தகை, இ.பரந்தாமன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் மு.மகேஷ் குமார்.

தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப.. நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர். தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் திருமதி க.லட்சுமி பிரியா. இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநர் செ.சரவணன். இ.ஆ.ப., தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்க நிறுவனர் / தலைவர் முனைவர் மிலிந்த் காம்ப்ளே, தேசிய தலைவர் ரவிக்குமார் நர்ரா, தென் இந்திய தலைவர் சௌந்தர் ராஜன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கான சாவிகளை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,Narikuku ,Tamil Nadu ,M.U. ,Dinakaran ,
× RELATED திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும்...