×

யூடியூப் வீடியோக்களை பார்த்து பயிற்சியெடுத்து 3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்ட பலே கில்லாடி வாலிபர் கைது


* வீட்டுக்கடனை அடைப்பதற்காக விபரீத முடிவு
* 350க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்ததில் சிக்கினான்

குன்றத்தூர்: யூடியூப் வீடியோக்களை பார்த்து பயிற்சியெடுத்து கடந்த 3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்ட பலே கில்லாடி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டுக்கடனை அடைப்பதற்காக அந்த வாலிபர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். 350க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மாங்காடு போலீசார் அவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளனர். கடந்த மாதம் மாங்காடு பிரதான சாலையில் பைக்கில் ஒரு தம்பதி சென்று கொண்டிருந்தனர். அப்போது, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலிச் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றான். இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற கொள்ளையனை வலைவீசி தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது ஆவடி அடுத்த பட்டாபிராம், கரிமேடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (33) என்பது தெரிய வந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பட்டதாரி வாலிபரான குணசேகரனுக்கு ஒரு குழந்தை உள்ளது. வானகரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த குணசேகரன், கடன் வாங்கி வீடு ஒன்றை கட்டியுள்ளார். வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை அடைப்பதற்கு செயின் பறிப்பில் ஈடுபட முயற்சி செய்துள்ளார். இதில் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக யூடியூப்பில் சில வீடியோக்களை பார்த்து செயின் பறிப்பில் எப்படி எல்லாம் ஈடுபடலாம் என்று பயிற்சி எடுத்துள்ளார்.

அதன்பிறகே, கடந்த 2021ம் ஆண்டு முதல் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் ஆவடி, திருவேற்காடு, மாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லும் நேரத்திலும் செயின் பறிப்பில் ஈடுபடுவதும், போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக நம்பர் பிளேட்டை மறைத்து வாகனத்தை ஓட்டியதும், பறித்த செயின்களை உடனுக்குடன் விற்று, கடனை அடைத்து வந்ததும் தெரிய வந்தது.

அது மட்டுமின்றி, போலீசார் தன்னை பிடிக்க வரும்போது எந்த வித பதட்டமும் இல்லாமல், ‘நான் செய்தது தவறுதான், என்றாவது ஒருநாள் சிக்கிக் கொள்வேன் என்று தெரிந்தே இந்த சம்பவத்தில் ஈடுபட்டேன்‘ என அவர் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்து, நன்றாக படித்து வேலையில் இருந்த குணசேகரன் செயின் பறிப்பில் ஈடுபட்டு சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆவடி மற்றும் திருவேற்காட்டில் போலீசார் தன்னை கண்டுபிடிக்க முடியாததால் தொடர்ந்து குணசேகரன் செயின் பதிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மாங்காடு போலீசார் சுமார் 350க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குணசேகரனை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post யூடியூப் வீடியோக்களை பார்த்து பயிற்சியெடுத்து 3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்ட பலே கில்லாடி வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Bale Killadi ,YouTube ,Kunradathur ,Bale Gilladi ,
× RELATED சொகுசு பூனை போல் ஆகிவிட்டார்:...