- விழுப்புரம் மாவட்டம்
- பெஞ்சல் புயல்
- விழுப்புரம்
- பெஞ்சல் புயல்
- தமிழ்நாடு அரசு
- பொதுப்பணித்துறை செயலாளர்
- மணிவாசகம்
விழுப்புரம், டிச. 5: விழுப்புரம் மாவட்டத்தில் 116 கிராமங்கள் பெஞ்சல் புயலில் அதிகளவு பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகம் தெரிவித்துள்ளார். இதனிடையே மழையால் துண்டிக்கப்பட்டு தனி தீவான கிராமங்களில் காவல்துறையினர் ட்ரோன் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கினர். விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் 250க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு மீள முடியாத நிலை உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகளும் நிவாரண பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி, சிவசங்கர் மற்றும் ஆட்சியர் பழனி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு கண்காணிப்பு அலுவலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மணிவாசகம், ராதாகிருஷ்ணன் மற்றும் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பொன்னையா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்விளையாட்டரங்கில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்ட நிவாரண பொருட்களை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளரும், வெள்ள நிவாரண பணிகளின் கண்காணிப்பு அலுவலருமான மணிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் புயல் வெள்ளத்தால் கண்டாச்சிபுரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், வானூர் வட்டங்களை சேர்ந்த 116 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த பகுதிகளை ஐஏஎஸ் அலுவலர்கள் கண்காணித்து, மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 900 மின்வாரிய பணியாளர்கள் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியிலும், அறுந்து விழுந்த மின் வயர்களையும் மாற்றி சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மின் கம்பங்கள் விழுந்து தண்ணீர் வடியாமல் உள்ள பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றி மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் ஓரிரு நாட்களில் முழுமையாக முடிக்கப்பட்டுவிடும். இதன் பின்னர் மாவட்டம் முழுவதும் முழுமையான மின் விநியோகம் கிடைக்கும். இப்பணிகளை கண்காணிக்க மின்வாரிய தலைமைப்பொறியாளர்கள் இருவர் விழுப்புரத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளை மேற்கொள்வதில் எவ்வித பாகுபாடில்லாமல், அனைத்து பகுதிகளிலும் முழுமையாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
The post விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் 116 கிராமங்கள் அதிகளவு பாதிப்பு appeared first on Dinakaran.