×

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட திருமணிமுத்தாற்று தரைப்பாலம்

அயோத்தியாப்பட்டணம், டிச. 4: அயோத்தியாப்பட்டணத்தில் கனமழைக்கு திருமணிமுத்தாற்று தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டு, வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. கிராமங்களை சேர்ந்த மக்கள் சேலம் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். பெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் 3 நாட்களாக கனமழையும் ஆறு, ஓடை மற்றும் வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அயோத்தியாப்பட்டணம் அடுத்த கோரத்துப்பட்டி சத்தியா காலனி பகுதியில் திருமணிமுத்தாறு ஓடுகிறது. மக்கள் பயன்பாட்டுக்காக திருமணிமுத்தாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழைக்கு திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் இப்பகுதியில் பிரதான சாலை துண்டிக்கப்பட்டதால், வாகன போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டு உள்ளது. கோராத்துப்பட்டி, வீராணம், வலசையூர் மற்றும் டி. பெருமாபாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சியை சேர்ந்த மக்கள், சேலத்துக்கு செல்ல பல கி.மீ., சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா விஜயகுமார், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி ஆகியோர், பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று கனமழைக்கு அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை பார்வையிட்டனர். அப்பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினர். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை மீண்டும் அமைத்து கொடுக்க, அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட திருமணிமுத்தாற்று தரைப்பாலம் appeared first on Dinakaran.

Tags : Swayamuthuthaaru ,Ayodhyapatnam ,Swayamuthutharu ,Salem ,Salem district ,Benjhal ,
× RELATED சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது