×

உருவ ஒற்றுமையில் ஒரே மாதிரியாக இருந்ததால் அண்ணன் பெயரை பயன்படுத்தி காதலித்து திருமணம், போலீசை ஏமாற்றிய தம்பி கைது: சினிமா பாணியில் 20 ஆண்டுகளாக சகோதரனாகவே சுற்றியதும் அம்பலம்

சென்னை: உருவ ஒற்றுமையில் ஒரே மாதிரியாக இருந்ததால், தனது அண்ணன் பெயர் மற்றும் அவரது சான்றிதழ்களை பயன்படுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சினிமா பாணியில் காதல் மனைவி மற்றும் நீதிமன்றம், போலீசாரை ஏமாற்றி வந்த தம்பியை போலீசார் பொறிவைத்து கைது செய்தனர். சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் தனது அண்ணன் பன்னீர்செல்வம் போன்று அச்சு அசல் ஒரேமாதியாக இருப்பார். ஊதாரியாக சுற்றி வந்த பழனி, தனது சகோதரன் பன்னீர்செல்வத்தின் சான்றிதழ்களை பயன்படுத்தி வேலை செய்து வந்தார்.

பின்னர் கடந்த 2002ம் ஆண்டு பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே லூர்து மேரி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். லூர்து மேரியிடம் ‘தான் பன்னீர்செல்வம் என்றும் தன்னை செல்லமாக பழனி என்று குடும்பத்தினர் அழைத்து வருவதாகவும் கூறி வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இதற்கிடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே தகராறில் பழனி தனது காதல் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால், தனது கணவன் பன்னீர்செல்வத்தின் மீது அவரது மனைவி லூர்து மேரி கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்படி போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பன்னீர்செல்வம் என்ற பெயரில் வாழ்ந்து வந்த பழனி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்யவில்லை என்றாலும், வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. இந்த வழக்கில் பழனிக்கு அவரது சகோதரன் பன்னீர்செல்வத்தின் பெயரையே பயன்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் மகிளா நீதிமன்றம் பன்னீர்செல்வத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதில் உயர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டது. பிறகு பழனி உச்ச நீதிமன்றத்தை நாடிய போது, உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. அதைதொடர்ந்து நீதிமன்றம் பன்னீர்செல்வத்தை கைது ெசய்ய பிடியாணை பிறப்பித்தது. அதன்படி கோடம்பாக்கம் போலீசார் காஞ்சிபுரத்தில் வசித்து வந்த பழனியின் சகோதரன் பன்னீர்செல்வத்தை கைது செய்ய முயன்றனர்.

அப்போது பன்னீர்செல்வம் எதற்கான என்னை கைது செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு உனது மனைவி அளித்த புகாரின் மீது கைது செய்ய வந்ததாக போலீசார் கூறினர். உடனே பன்னீர்செல்வம், அது நான் இல்லை எனது தம்பி பழனி என்று கூறியுள்ளார். இதனால் குழப்பமடைந்த போலீசார் உடனே பன்னீர்செல்வத்தின் மீது புகார் அளித்த லூர்து மேரியை அழைத்து வந்து நேரடியாக விசாரணை நடத்திய போது, லூர்து மேரி இவர் இல்லை எனது கணவர், என்று கூறி போலீசாருக்கு வியப்பை ஏற்படுத்தினார்.

உடனே போலீசார் யார் பன்னீர்செல்வம் என்று விசாரணை நடத்திய போது, தான் பன்னீர்செல்வத்தின் தம்பி பழனி தான் பன்னீர்செல்வம் என்று கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது காதல் மனைவி மற்றும் நீதிமன்றம், போலீசாரை ஏமாற்றி வந்ததும், பன்னீர்செல்வத்தின் சான்றிதழ்களை பயன்படுத்தி வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி வந்ததும், அப்போது தான் லூர்து மேரியை காதலித்து திருமணம் செய்ததும் உறுதியானது. அதேநேரம் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பழனி தலைமறைவாகிவிட்டார்.

இருந்தாலும் போலீசார் விடாமல் கடந்த 5 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து வந்த பழனியை நீதிமன்ற உத்தரவுப்படி மடிப்பாக்கத்தில் பதுங்கி இருந்த போது கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். சென்னையில் உருவ ஒற்றுமையை பயன்படுத்தி தனது சகோதரனின் சான்றிதழ்களை பயன்படுத்தியும், சகோதரன் பெயரிலேயே காதலித்து பெண்ணை திருமணம் செய்து 20 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பம் நடத்தி ஏமாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post உருவ ஒற்றுமையில் ஒரே மாதிரியாக இருந்ததால் அண்ணன் பெயரை பயன்படுத்தி காதலித்து திருமணம், போலீசை ஏமாற்றிய தம்பி கைது: சினிமா பாணியில் 20 ஆண்டுகளாக சகோதரனாகவே சுற்றியதும் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...