×

ரூ70,000 கோடி சொத்துக்கு அதிபதி; உலகின் பணக்கார பேட்ஸ்மேன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: குமார் மங்கலம் பிர்லா மகன் ஆர்யமான்


புதுடெல்லி: இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர்களில் ஒருவரான குமார் மங்கலம் பிர்லாவின் மகனும், கிரிக்கெட் வீரருமான ஆர்யமான் பிர்லா (22), கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  இந்தியாவை சேர்ந்த எம்.எஸ்.தோனி, சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடிக்கு மேல் என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்றே. வெளிநாடுகளில் டென்னிஸ், குத்துச் சண்டை போன்ற போட்டிகளில் ஜாம்பவான்களாக திகழும் பல வீரர்களின் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய் இருக்கும். இவர்கள் அனைவரையும் மிஞ்சும் வகையில் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரராக திகழ்பவர் ஆர்யமான் பிர்லா. இவர், பல்வேறு தொழில்களை நடத்தும் பிர்லா குழுமத்தின் உரிமையாளரான குமார் மங்கலம் பிர்லாவின் மகன்.

கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ஆர்யமான், 9 முதல் தர போட்டிகளில் ஆடி, 414 ரன் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடஙகும். கடந்த 2017-18 ஆண்டுகளில் ரஞ்சி கோப்பைக்காக, மத்தியப்பிரதேச அணிக்காக இவர் ஆடியுள்ளார். 2018ல் சி.கே.நாயுடு கோப்பைக்கான போட்டியில் ம.பி.க்காக ஆடிய ஆர்யமான் 795 ரன் குவித்தார். அவரது சராசரி, 79.50.கடந்த 2018ல் நடந்த ஐபிஎல் ஏலத்தின்போது, ஆர்யமானை 30 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்தது. இருப்பினும், சொந்த காரணங்களுக்காக அந்த போட்டியில் விளையாடாமல் ஆர்யமான் விலகினார். அதன் பின் எந்த போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆர்யமான் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் முன், பிர்லா குடும்ப பேரன், குமார் மங்கலம் பிர்லாவின் மகன் என்று மக்கள் என்னை அறிந்து வைத்திருந்தனர். ஆனால், கிரிக்கெட் ஆடத் துவங்கியபின், எனக்கென ஒரு பெயரை பெறத் துவங்கினேன். இதை என் வாழ்நாள் சாதனையாக கருதுகிறேன்’ என்றார்.

The post ரூ70,000 கோடி சொத்துக்கு அதிபதி; உலகின் பணக்கார பேட்ஸ்மேன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: குமார் மங்கலம் பிர்லா மகன் ஆர்யமான் appeared first on Dinakaran.

Tags : Kumar Mangalam Birla ,Aryaman ,New Delhi ,Aryaman Birla ,India ,MS Dhoni ,Sachin Tendulkar ,Virat Kohli ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...