×

போதை பொருள் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிப்பதால் வெளியாட்களை திருமணம் செய்ய தடை: கிராம பஞ்சாயத்தில் வினோத தீர்மானம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டம் ஜவஹர்கே என்ற கிராமத்தில் கிராமவாசிகள் சமீபத்தில் பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. அப்போது, ‘வெளியில் இருந்து தங்கள் கிராமத்திற்கு வந்துள்ளவர்கள், இந்த கிராமத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்ய கூடாது, மீறி செய்தால் கடும் தண்டனை அளிக்கப்படும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகி சுக்செயின் சிங் கூறுகையில், ‘இந்த கிராமத்திற்கு அருகில் ஏராளமான புலம்பெயர்ந்தோர் வசித்து வருகிறார்கள். அவர்கள், போதை பொருள் வியாபாரிகளுக்கு ஆதரவு தருகிறார்கள். இதனால் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் போலீசார், எங்கள் கிராமவாசிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் சிலரை கைதும் செய்கிறார்கள். இதனால் எங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தவர்களுடன், எங்கள் கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு திருமணம் நடப்பது இயல்புதான் என்றாலும் வரும் காலங்களில் நடக்காது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மேலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை எதிர்த்து தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம்.

அது தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எங்கள் கிராமத்தில் ஆதரவாகவோ, சாட்சியாகவோ அல்லது ஜாமின் வழங்கவோ மாட்டார்கள். எங்கள் கிராமத்தில் சுமார் 3,500 பேர் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 300 பேர் பிற மாநிலங்களில் இருந்து குடியேறியவர்கள். மேலும் இந்த தீர்மானம் புதிதல்ல. புலம்பெயர்ந்தவர்களுக்கு எங்கள் கிராமத்தில் பல கட்டுப்பாடுகள் உள்ளது’ என்றார்.

The post போதை பொருள் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிப்பதால் வெளியாட்களை திருமணம் செய்ய தடை: கிராம பஞ்சாயத்தில் வினோத தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,PUNCHAYAT ,JAVAHARKE ,MANSA DISTRICT ,PUNJAB STATE ,Dinakaran ,
× RELATED பல்வேறு முறைகேடுகளை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்