×

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் கோரத்தாண்டவம்.. மீளா துயரத்தில் லட்சக்கணக்கான மக்கள் : நாடாளுமன்றத்தில் பதிவு செய்த எம்பிக்கள்!!

டெல்லி : ஒன்றிய அரசு உடனடியாக ரூ.2000 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர். மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் அப்துல்லா பேசுகையில், “தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் 8 மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.வீடுகள், சாலைகள், ரயில் பாலங்கள், மின்கட்டமைப்பு, வேளாண் பயிர்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கான மக்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றுள்ளது புயல். ஒன்றிய அரசு உடனடியாக ரூ.2000 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். சேதமடைந்த கட்டமைப்புகளை உடனடியாக புனரமைக்க உதவ வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களை துயரத்தில் இருந்து மீட்க உதவி தேவை. வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய குழுவை உடனடியாக அனுப்ப வேண்டும். மத்திய குழுவை அனுப்பி சேதமடைந்த பயிர்கள் குறித்து கணக்கீடு செய்ய வேண்டும். புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒன்றிய அரசு
நிவாரண உதவிகளை அளிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார். அதே போல் மதிமுக எம்.பி.வைகோ பேசுகையில், “ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தள்ளன, பல ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மின்சாரம் தாக்கியும் சுவர்கள் இடிந்து விழுந்தும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சாமானிய மக்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் புயல் பாதிப்புகள் காரணமாக வேளாண் பயிர்கள், உள்கட்டமைப்பு உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; சாலைகள், ரயில் பாதைகள் உள்ளிட்டவை சிதைந்துள்ளன; விவசாயிகள், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கின்றனர்.புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும்,”இவ்வாறு உரையாற்றினார்.

The post தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் கோரத்தாண்டவம்.. மீளா துயரத்தில் லட்சக்கணக்கான மக்கள் : நாடாளுமன்றத்தில் பதிவு செய்த எம்பிக்கள்!! appeared first on Dinakaran.

Tags : Fennel ,Nadu ,Delhi ,EU government ,Tamil Nadu ,Dimuka ,Abdullah ,Storm Fengel ,Chennai ,Chengalpattu ,Viluppuram ,Fennel Storm ,
× RELATED ஃபெஞ்சல் புயல் கோரத்தாண்டவம்