×

வெவ்வேறு சமூகம் என்பதால் எதிர்ப்பு; இன்ஸ்டாகிராம் காதலனை பேச அழைத்து சரமாரி வெட்டிக்கொலை: காதலியின் அண்ணன் உட்பட 2 பேர் கைது


நெல்லை: இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் தங்கையை காதலித்ததால் அவரை பேசுவதற்கு வரவழைத்து சரமாரி வெட்டிக்கொலை செய்த அண்ணன், நண்பருடன் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை சாந்திநகரைச் சேர்ந்தவர் சிம்சன் என்ற புஷ்பராஜ் (25). தனியார் வங்கியில் வேலை செய்கிறார். இவரது தங்ைக சரோஜா என்ற சரோஜினி (23), பொறியியல் பட்டதாரியான இவர் நாகர்கோவிலில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த விஜயகுமார் (24) என்பவருடன் சரோஜினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. விஜயகுமார், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டியில் சிமென்ட் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர்களின் நட்பு காதலாக மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.

இவர்களின் காதல் விவகாரம் சரோஜினியின் பெற்றோருக்கும், அண்ணன் சிம்சன் புஷ்பராஜிக்கும் தெரிய வரவே அவரை வேலைக்கு அனுப்பவில்லை. வீட்டில் இருந்த அவரிடம் காதலை கைவிடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனாலும் அவர் விஜயகுமாருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் சரோஜினி வீட்டை விட்டு வெளியேறி விஜயகுமாரின் வீட்டில் தஞ்சமடைந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் பாளை. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தனர். போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பிரச்னையை பேசி தீர்வு காணுமாறு கூறினர். அப்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்வோம் என்று கூறி சரோஜினியை சமாதானப்படுத்தி அவரது பெற்றோருடன் விஜயகுமார் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் பெற்றோர் தொடர்ந்து காதலனை மறந்துவிடும்படி வற்புறுத்தியதால் விரக்தியடைந்த சரோஜினி சில நாட்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது அண்ணன் சிம்சன் புஷ்பராஜ், விஜயகுமாரை தொடர்பு கொண்டு காதல் விவகாரம் குறித்து பேசி முடிவெடுக்கலாம் வாருங்கள் என அழைத்துள்ளார். அதன்படி அவர், சிமென்ட் கம்பெனியில் இருந்து நண்பர் ஒருவருடன் ரயிலில் நேற்று காலை நெல்லைக்கு வந்தார். ரயில் நிலையத்துக்கு நண்பர் சிவாவுடன் வந்த சிம்சன் புஷ்பராஜ், விஜயகுமாரை மட்டும் தங்களுடன் பைக்கில் அழைத்து சென்றார். பாளை., சாந்திநகர் 24வது தெருவில் சிவா வீட்டின் மாடிக்கு சென்று மூவரும் காதல் விவகாரம் தொடர்பாக பேசினர். அப்போது உடன்பாடு ஏற்படாததால் ஆத்திரம் அடைந்த சிம்சன் புஷ்பராஜூம், சிவாவும் அரிவாளால் சரமாரியாக விஜயகுமாரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.

தகவலறிந்து பாளையங்கோட்டை போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ேபாலீசார் வழக்கு பதிந்து, சிம்சன் புஷ்பராஜ், விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர். விஜயகுமாரை கொலை செய்து விட்டு அரிவாளை அங்குள்ள வாட்டர் டேங்கில் போட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த அரிவாளை போலீசார் மீட்டனர். வேறு சமுகத்தைச் சேர்ந்த வாலிபர் காதல் விவகாரத்தால் கொல்லப்பட்ட சம்பவம் பாளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வெவ்வேறு சமூகம் என்பதால் எதிர்ப்பு; இன்ஸ்டாகிராம் காதலனை பேச அழைத்து சரமாரி வெட்டிக்கொலை: காதலியின் அண்ணன் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Instagram ,Saramari ,Nella ,PUSHBARAJ ,PALAIANKOTA CHANDHI NAGAR ,SIMSON ,Saramari Massacre ,Dinakaran ,
× RELATED ஒரேநாளில் அதிக `பாலோயர்ஸ்’ ஆசைக்காக...