×
Saravana Stores

34,372 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்; கணக்கெடுப்பு பணி முடிந்ததும் இழப்பீடு வழங்க நடவடிக்கை: ஆய்வுக்கு பின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்


தஞ்சாவூர்: ‘மழை நீரில் மூழ்கி 34,372 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. கணக்கெடுப்பு பணிகள் முடிந்ததும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என ஆய்வுக்கு பின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் உக்கடை பகுதியில் மழையால் மூழ்கி சேதமான நெற்பயிர்களை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள், மழையால் மூழ்கி சேதமான பயிர்களை வயலில் இருந்து எடுத்து அமைச்சர்களிடம் காண்பித்ததோடு, சேதமான பயிர்களை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தனர்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழையால் 34,372 ஏக்கர் அளவில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,367 ஏக்கர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் 8,250 ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 19,202 ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 2,395 ஏக்கர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,055 ஏக்கர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 87 ஏக்கர் என்ற அளவிற்கு நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக முதல் கட்ட கணக்கீட்டில் தகவல்கள் கிடைத்துள்ளது. சில இடங்களில் தண்ணீர் வடியாததால் பயிர்கள் மூழ்கியுள்ளது.

தற்போது வேளாண்துறை அதிகாரிகள், துறை அதிகாரிகள், சேதமான பயிர்களின் விவரங்களை கணக்கீடு செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 33 சதவீதம் அளவிற்கு பயிர்களின் பாதிப்பு இருந்தால், அதற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரும் செய்யாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தான் ‘சி அண்ட் டி’ வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. அதுவும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கோடை காலத்தில் தூர்வாரப்பட்டுள்ளது. தூர்வாரும் பணிக்கு பட்ஜெட்டிற்கு முன்பே அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டு நரியங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அகஸ்தியம்பள்ளி பல்நோக்கு பேரிடர் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ், நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘முதல்வர் அவ்வப்பொழுது சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் அமைச்சர்களை தொடர்பு கொண்டு மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். எனவே யாரும் அச்சம் அடைய வேண்டாம்’ என்றார்.

The post 34,372 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்; கணக்கெடுப்பு பணி முடிந்ததும் இழப்பீடு வழங்க நடவடிக்கை: ஆய்வுக்கு பின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneerselvam ,Thanjavur ,MRK Panneer Selvam ,Ukkadai ,Thanjavur district ,Dinakaran ,
× RELATED அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்...