சென்னை: நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை தனது ஆவண படத்தில் பயன்படுத்தியதற்காக நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்துக்கு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நோட்டீசுக்கு பதிலளித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழ்நிலையில் நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நயன்தாரா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கில் சம்மந்தப்பட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம் மும்பையில் உள்ளதால் மும்பையில்தான் வழக்கு தொடர முடியும் என்று வாதிட்டார்.
அதற்கு தனுஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வழக்கில் சம்மந்தப்பட்ட நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னையில்தான் வசிக்கிறார்கள். எனவே, இங்கு வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது. எனவே, இந்த வழக்கை தொடர அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னையில் வசிக்கிறார்கள். எனவே, இந்த வழக்கை தாக்கல் செய்ய வொண்டர் பார் நிர்வனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
The post நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்திய நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர தனுஷுக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.