டெல்லி: அதானி மீதான அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு குறித்து மோடி அரசு மௌனமாக உள்ளது என காங்கிரஸ் நோட்டீஸ் வழங்கியுள்ளது. பிரபல தொழில் அதிபரான கௌதம் அதானி, தனது சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை வினியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்தியாவில் ஆந்திரா உள்பட மாநில அதிகாரிகளுக்கு ரூ.2 ,200 கோடி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும் இதனை மறைத்து அமெரிக்கர்களிடம் இருந்து அதிகளவிலான முதலீடுகளை பெற்றுள்ளதாகவும், இது அமெரிக்க சட்டத்துக்கு எதிரானது என்றும் கூறி நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அதானிக்கு சம்மனும் அனுப்பப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது . இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. இந்த பரபரப்பான சூழலில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இரு அவைகள் கூடியதுமே அதானி முறைகேடு விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கோஷமிட்டனர் இதன் காரணமாக அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. நேற்றுமே இந்த விவகாரம் எதிரொலித்தது. இந்த நிலையில், அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில், கௌதம் அதானி மீதான சமீபத்திய அமெரிக்க குற்றச்சாட்டு, சூரிய சக்தி ஒப்பந்தங்கள் மற்றும் பத்திர மோசடிகளுக்காக 265 மில்லியனுக்கும் அதிகமான லஞ்சம், அதானி குழுமத்தின் மீது இருண்ட நிழலை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தில் மோடி அரசின் மௌனம் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் உலகளாவிய நிலை பற்றிய கவலையை எழுப்புகிறது. அதானி உடனான நட்பு குறித்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். மேலும், ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு அதானி 21,750 கோடி லஞ்சம் கொடுத்ததாகக் கூறி, SECI உடனான சூரிய சக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஆந்திர அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து உடனடி விவாதம் மற்றும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post அதானி மீதான அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு குறித்து மோடி அரசு மௌனமாக உள்ளது: காங்கிரஸ் நோட்டீஸ் appeared first on Dinakaran.