- டெல்டா
- மாவட்டங்களில்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- டெல்டா மாவட்டங்களுக்கான பேரிடர் மீட்புக் குழு
- எம். ஸ்டால்
- தின மலர்
சென்னை: கனமழையின்போது பொதுமக்களை தாழ்வான பகுதிகளில் இருந்து முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரவேண்டும் என்றும், டெல்டா மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக் குழுவை அனுப்பி மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து கனமழையை எதிர்கொள்ள டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காணொலிக் காட்சி வாயிலாக மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, இந்த மாவட்டங்களில் போதுமான நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதோடு, பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளுக்கென பல்துறை மண்டல குழுக்கள், மருத்துவ குழுக்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளன என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர். திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படை குழுவும், மாநில பேரிடர் மீட்பு படை குழுவும், தஞ்சாவூருக்கு 2 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளது.
மேலும், இந்த மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்வதை தடுக்க அறிவுரை வழங்கப்பட்டு பெரும்பான்மை படகுகள் கரை திரும்பியுள்ளன. ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு செல்ல நவீன தொலைத்தொடர்பு சாதனங்களுடன் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் பல்துறை அலுவலர்களுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன என்றும் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, நிவாரண முகாம்களை அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கனமழையின்போது பொதுமக்களை தாழ்வான பகுதிகளில் இருந்து முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரவேண்டும்.
வெள்ளநீர் தேங்கி பயிர்கள் சேதமடையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மின்சார வசதி தடையின்றி கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமை செயலாளர் முருகானந்தம், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவன மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் பயணம் ரத்து
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து, 28.11.2024 மற்றும் 29.11.2024 ஆகிய நாட்களில் விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கள ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
The post பொதுமக்களை முன்கூட்டியே முகாம்களுக்கு அழைத்து வர வேண்டும்; டெல்டா மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக் குழு விரைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.