புதுடெல்லி: ஜனவரி 14-ம் தேதி நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு ஜனவரி 16-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சி.ஏ. (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வு அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என இந்த தேர்வை நடத்தும் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ஸ் ஆப் இந்தியா (அய்.சி.ஏ.அய்.) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. ஜனவரி 14-ம் தேதியன்று தமிழ்நாட்டில் பொங்கல் விழா கொண்டாடப்படும் வேளையில், சி.ஏ. தேர்வை நடத்துவது, இந்த தேர்வை எதிர்கொள்ள இருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இதன்படி பொங்கல் பண்டிகை அன்று சி.ஏ. தேர்வுகளை ஒன்றிய அரசு அறிவித்ததற்கு, மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இதற்கு பதிலளித்த ஒன்றிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இதிலும் மொழி பிரச்சினையை எதிர்க்கட்சிகள் பிரச்சாரமாக கொண்டு வருகின்றனர் என்றும் தேர்வு ஆணையத்தின் முடிவுகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வந்த நிலையில், ஜனவரி மாதம் 14-ம் தேதி நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு, ஜனவரி 16-ம் தேதி அன்று நடைபெறும் என்று இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
The post பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு.! பொங்கல் பண்டிகையன்று அறிவிக்கப்பட்ட சி.ஏ. தேர்வு தேதியை மாற்றம் செய்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.