ஜெட்டா: இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடருக்காக 2வது நாளாக நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் ரூ.10.75 கோடிக்கு, பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் போட்டிக்கான 2ம் நாள் ஏலம் நேற்று, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தொடர்ந்தது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்றன.
முதல் நாள் ஏலத்தின் முடிவில், அதிகபட்சமாக பெங்களூரு ரூ.30.65 கோடி, மும்பை இந்தியன்ஸ் ரூ.26.10 கோடியை மிச்சம் வைத்திருந்தன. தவிர, நிர்ணயிக்கப்பட்ட தொகையில் ரூ.22.50 கோடி , பஞ்சாப், ரூ.13.80 கோடி டெல்லி, ரூ.17.35 கோடியை ராஜஸ்தான், ரூ.10.05 கோடி கொல்கத்தா, ரூ.15.60 கோடியை சிஎஸ்கே அணிகள் ஏலம் கேட்புக்காக மீதம் வைத்திருந்தன. சன்ரைசர்ஸ் அணியிடம் ரூ.5.15 கோடி மீதம் இருந்தது. மும்பை, ஆர்சிபி அணிகள் கைவசம் குறைந்த வீரர்களை இருப்பு வைத்துள்ளன. எனவே, நேற்றைய ஏலத்தில் அதிக வீரர்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவை இருந்தன.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ஏலம் துவங்கியது. கேப்டு பிளேயர்ஸ் எனப்படும், தேசிய அணிக்காக ஏற்கனவே விளையாடியுள்ள மயன்க் அகர்வால், பாப் டூபிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், ரோமேன் பாவல், அஜிங்க்யா ரஹானே, பிருத்வி ஷா, கேன் வில்லியம்சன் உள்ளிட்டோர் முதலில் ஏலம் விடப்பட்டனர். பிரபல வெளிநாட்டு வீரர்களான கேன் வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது, அவர்களை ஏலம் எடுக்க யாரும் முன் வரவில்லை. அதன் பின் பெயர் அறிவிக்கப்பட்ட ரோமேன் பால் மீதும் யாரும் ஆர்வம் காட்டவில்லை.
இருப்பினும், அவரை, கொல்கத்தா அணி, அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு வாங்கியது. இதே அணி, வைபவ் அரோராவை ரூ.1.80 கோடி, மயன்க் மன்கண்டேவை ரூ.30 லட்சம், மணீஷ் பாண்டேவை ரூ. 75 லட்சத்துக்கு வாங்கியது.
அதிரடி வீரர் பாப் டூப்ளெசிசும், அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார். இதற்கு முன் கேப்டனாக செயல்பட்ட அவரை, ஆர்டிஎம் (ரைட் டு மேட்ச்) முறையில் வாங்க ஆர்சிபி தயாராக இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சமீர் ரிஸ்வி, கருண் நாயர் ஆகியோர் தலா ரூ.30 லட்சத்துக்கு டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டனர்.
ஒரு காலத்தில் டிமாண்ட் அதிகமாக இருந்த வீரர்களில் ஒருவரான பிருத்வி ஷா, மயன்க் அகர்வால், ஷர்துல் தாக்குர், டேரில் மிட்செல், கேஷவ் மகராஜ், பரத், விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் அடிப்படை விலை கூட கிடைக்காமல் ஏமாந்தனர். இந்நிலையில், ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை, குஜராத் அணி, 3.20 கோடிக்கு வாங்கியது. தவிர, ஜெரால்ட் கோட்ஸி ரூ.1.25 கோடி, மஹிபால் லோம்ரோர் ரூ.1.70 கோடி, ஜெயந்த் யாதவ், ரூ. 75 லட்சம், குமார் குஷாக்ரா, மானவ் சுதார், அனுஜ் ராவத், நிஷாந்த் சிந்து ஆகியோர் தலா ரூ.30 லட்சம் தொகைக்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டனர்.
இதற்கு முன், ரூ.18.50 கோடிக்கு விலைபோன இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரன், சிஎஸ்கே அணியால், வெறும் 2.40 கோடிக்கு வாங்கப்பட்டார். அந்த அணியால், அன்சுல் காம்போஜ் ரூ. 3.40 கோடி, தீபக் ஹூடா ரூ.1.70 கோடி, விஜய் சங்கர் ரூ.1.20 கோடி, குர்ஜப்னீத் சிங் ரூ.2.2 கோடி, முகேஷ் சவுத்ரி, ஷேக் ரஷீத் தலா ரூ. 30 லட்சம் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். சன்ரைசர்ஸ் அணி, ஜெய்தேவ் உனத்கத்தை ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் 7 முறை ஏலம் எடுக்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மேலும், அபிநவ் மனோகர் ரூ.3.20 கோடி, சிமர்ஜீத் சிங் ரூ.1.50 கோடி, ஈஷன் மலிங்கா ரூ.1.2 கோடி, பிரைடன் கார்ஸ் ரூ.1 கோடி, கமிந்து மெண்டிஸ் ரூ.75 லட்சம், ஜீசன் அன்சாரி ரூ. 40 லட்சம், அனிகேத் வர்மா ரூ.30 லட்சம் தொகைக்கு சன்ரைசர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இந்திய வீரர் முகேஷ் குமாரை ரூ.8 கோடிக்கு டெல்லி ஏலம் எடுத்தது. வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பை, லக்னோ அணி, ரூ.8 கோடிக்கு ஏலம் எடுத்தது. மும்பை அணி, டிரென்ட் போல்ட் ரூ.12.5 கோடி, தீபக் சஹர் ரூ.9.25 கோடி, நமன் திர் ரூ.5.25 கோடி, இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ் ரூ. 5.25 கோடி, மிட்செல் சான்ட்னர் ரூ. 2 கோடி, ராபின் மின்ஸ் ரூ. 65 லட்சம், கரண் சர்மா ரூ. 50 லட்சம், அல்லா கஸன்பர் ரூ.4.80 கோடி, ரீஸ் டாப்ளி ரூ. 75 லட்சம் தொகைக்கு ஏலம் எடுத்துள்ளது.
பஞ்சாப் அணி, மார்கோ ஜேன்சனை ரூ.7 கோடி, ஜோஷ் இங்லீசை ரூ.2.60 கோடி, பிரியன்ஸ் ஆர்யாவை ரூ.3.80 கோடிக்கு வாங்கி உள்ளது. ராஜஸ்தான் அணி, துஷார் தேஷ்பாண்டே ரூ.6.50 கோடி, 13 வயதே ஆன வைபவ் சூரியவன்ஸ் ரூ.1.1 கோடி, நிதிஷ் ராணா ரூ.4.20 கோடி, ஆகாஷ் மத்வால் ரூ.1.20 கோடி, சுபம் துபே ரூ.80 லட்சம், குமார் கார்த்திகேயா சிங் ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. பெங்களூரு அணி, ரஸிக் தர் ரூ.6 கோடி, க்ருணால் பாண்ட்யா ரூ.5.75 கோடி, ஆஸியின் டிம் டேவிட் ரூ. 3 கோடி, சுயாஷ் சர்மா ரூ.2.60 கோடிக்கு வாங்கி உள்ளது. நேற்றைய ஏலத்தில், இந்திய வீரர்களை வாங்குவதில் பல அணிகள் ஆர்வம் காட்டின. அதேசமயம், ஆஸியை சேர்ந்த அதிரடி வீரர் டேவிட் வார்னர், அலெக்ஸ் கேரி, இங்கிலாந்து வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, அடில் ரஷித், ஆப்கன் வீரர் முஜிபுர் ரஹ்மான், நியூசிலாந்து வீரர்கள் டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன், வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாய் ஹோப் உள்ளிட்ட பல வெளிநாட்டவர் ஏலத்தில் எடுக்கப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
* மும்பை அணிக்காக வில் ஜேக்சை விட்டுத் தந்ததா பெங்களூரு?
இங்கிலாந்து ஆல் ரவுண்டர் வில் ஜேக்சை ஏலம் எடுப்பதில் பஞ்சாப், மும்பை அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. அவருக்கான அடிப்படை விலை ரூ.2 கோடி மட்டுமே. ஆனால், இந்த அணிகள் இடையே நிலவிய போட்டியால், ஏலத் தொகை ரூ.5.25 கோடியை எட்டியது. அதன் பின் பஞ்சாப் ஏலம் கேட்பதை நிறுத்திக் கொண்டது. இருப்பினும், ஜேக்சை ஏலம் எடுப்பதற்கு முன்னுரிமை தரும் ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) கார்டு பெங்களூரு அணியிடம் இருந்ததால் அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு காணப்பட்டது. ஆனால், பெங்களூரு அணி அதனை செய்யாமல் தவிர்த்தது. இதனால் மும்பை அணிக்கு வில் ஜேக்ஸ் ஏலம் தரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தன் இருக்கையில் இருந்து எழுந்து சென்று பெங்களூரு அணி நிர்வாகியுடன் கை குலுக்கினார். மும்பை அணிக்காக வேண்டுமென்றே வில் ஜேக்சை பெங்களூரு அணி விட்டுத் தந்ததாக சிலர் கருத்து தெரிவித்தனர்.
The post ஐபிஎல் தொடர் 2ம் நாள் ஏலத்தில் சட்டென்று மாறுது வானிலை… இந்திய வீரர்கள் காட்டில் பணமழை: ரூ.10.75 கோடிக்கு விலைபோன புவனேஷ் குமார் appeared first on Dinakaran.