×
Saravana Stores

அனல் கக்கிய பந்துகளால் அடங்கிய கொட்டம்: சொந்த மண்… சொற்ப ரன்… வீழ்ந்தது ஆஸ்திரேலியா

பெர்த்: பெர்த்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்டின் 4ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா, இந்திய பவுலர்களின் அனல் கக்கும் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 238 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 295 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆஸி சுற்றுப்பயணம் சென்றுள்ள ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது.

பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸி, மிக மோசமாக ஆடி 104 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்தியா 46 ரன் முன்னிலை பெற்றது. பின், 2ம் இன்னிங்சை துவக்கிய இந்திய துவக்க வீரர்கள் அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 6 விக்கெட் இழப்புக்கு 489 ஆக இருந்தபோது டிக்ளேர் செய்யப்பட்டது. துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 161, நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி அவுட் ஆகாமல் 100 ரன் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, இமாலய வெற்றி இலக்காக 534 ரன்னை நோக்கி ஆட்டத்தை துவக்கிய ஆஸி வீரர்கள் 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 12 ரன் எடுத்து தடுமாறினர். இந்நிலையில் 4ம் நாளான நேற்று, களத்தில் 3 ரன்னுடன் இருந்த கவாஜா உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்து ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்திய பவுலர்களின் அனல் கக்கும் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், கூடுதலாக ஒரு ரன் சேர்த்த கவாஜா 4 ரன்னிலும், ஸ்மித் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால், ஆஸியின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என இந்திய ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

ஆனால், அடுத்து இணை சேர்ந்த டிராவிஸ் ஹெட், மார்ஷ் பொறுப்புடன் ஆடி, தோல்வியை தள்ளிப் போட்டனர். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 82ரன் சேர்த்தனர். சதத்தை நெருங்கிய டிராவிஸ் 89 ரன்னிலும், அரை சதத்தை நெருங்கிய மார்ஷ் 47 ரன்னிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். பின் வந்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பொறுப்புடன் விளையாட, ஸ்டார்க் 12, நாதன் லயன் 0 ரன்னிலும் வெளியேறினர். பொறுமையுடன் விளையாடிக் கொண்டிருந்த கேரி 36 ரன்னில் ஆட்டமிழக்க ஆஸியின் 2வது இன்னிங்ஸ் 54 ஓவரில் 238 ரன்னுக்கு முடிவுக்கு வந்தது. அதனால் இந்தியா 295 ரன் வித்தியாசத்தில் முதல் வெற்றியை வசப்படுத்தியது.

ஹேசல்வுட் 4 ரன்னுடன் களத்தில் இருந்தார். இந்திய வீரர்கள் பும்ரா, சிராஜ் தலா 3, சுழல் வாஷிங்டன் சுந்தர் 2, ராணா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அறிமுக வீரர் நிதிஷ்குமார், ஆஸியின் மார்ஷை வீழ்த்தி தனது முதல் சர்வதேச விக்கெட்டை எடுத்தார். சமீபத்தில் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் நியூலாந்திடம் ஒயிட்வாஷ் ஆகி சோகத்தில் ஆழ்ந்திருந்த இந்திய ரசிகர்களுக்கு, ஆஸியில் நடந்த முதல் டெஸ்ட்டில் கிடைத்த வெற்றி பெரியளவில் உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த போட்டியில் 2 இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றியை எளிதாக்கிய கேப்டன் பும்ரா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த 2 அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் டிச. 6ம் தேதி பகல்/இரவு ஆட்டமாக அடிலெய்டில் தொடங்குகிறது.

2 இன்னிங்சில் 8 போட்ட பும்ரா ஆட்ட நாயகன்: ஆசியாவுக்கு வெளியே கிடைத்த இந்தியாவின் 2வது மெகா வெற்றி
* ஆசிய கண்டத்துக்கு வெளியே இந்தியா அதிக ரன் வித்தியாசத்தில் பெற்ற 2வது பெரிய வெற்றி இது. இதற்கு முன்பு, 2019ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 318 ரன் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற வெற்றி முதலிடம் வகிக்கிறது.
* பெர்த்தில் வெற்றி பெற்ற 2வது ஆசியக் கேப்டன் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். முதல் இடத்தில் அனில் கும்ப்ளே (2008) இருக்கிறார்.
* ஆஸி அணி சொந்த மண்ணில் 2 இன்னிங்சிலும் சேர்த்து 400 ரன்னுக்கு குறைவாக எடுத்தது, இது 5வது முறையாகும். இந்தப் பட்டியலில் 104+238=342 ரன் 2வது இடத்தில் உள்ளது. இதற்கு முன்பு 2016ல் ஹோபர்ட்டில் நடந்த டெஸ்ட்டில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக எடுத்த 246 ரன் முதல் இடம் வகிக்கிறது.
* சொந்த மண்ணில் முதல் டெஸ்ட்டில் ஆஸி தோற்றது 21ம் நூற்றாண்டில் இது 4வது முறை. இந்தப்பட்டியலில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2008, 2016 (பெர்த்), இந்தியாவுக்கு எதிராக 2018(அடிலெய்டு), 2024 (பெர்த்) ஆகியவை உள்ளன.

The post அனல் கக்கிய பந்துகளால் அடங்கிய கொட்டம்: சொந்த மண்… சொற்ப ரன்… வீழ்ந்தது ஆஸ்திரேலியா appeared first on Dinakaran.

Tags : Australia ,Perth ,Australian cricket team ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் தொடர் 2ம் நாள் ஏலத்தில்...