தொண்டாமுத்தூர்: கோவை பேரூர் பிறவாப் புளிய மரத்தில் காஸ் லாரி மோதி கிளைகள் முறிந்தன. இதனால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. கோயில் நிர்வாகத்தின் அனுமதி பெற்ற பின்னரே கிளைகளை வெட்டி அகற்றி லாரியை மீட்க முடியும் என்பதால் சிரமம் ஏற்பட்டது. பிறவா புளியமரம் சேதமானதால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுமோ என்று பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை பேரூரில் மேலை சிதம்பரம் என்று அழைக்கப்படும் பட்டீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சிவபெருமான் பட்டீஸ்வரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள் பாலிக்கிறார். இந்த கோயில் 2ம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரி நாதர், கச்சியப்ப முனிவர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
பேரூர் பட்டீஸ்வரரை சரணடைந்தோருக்கு பிறப்பு, இறப்பு இல்லை என்பதற்கு சான்றாக கோயிலின் முன்பாக பிறவாப்புளி என்ற புளியமரம் உள்ளது. இதன் விதைகள் எங்குமே முளைக்காது. இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். புழுக்காத சாணம், இங்குள்ள இறவா பனை சிறப்பு வாய்ந்தது. வயது எவ்வளவு ஆனாலும் இறப்பே இல்லாது வாழ்வது இறைவனின் அருளை உணர்த்து ஆகும்.
இந்நிலையில் இன்று (திங்கள்) காலை கோவையை நோக்கி காஸ் லாரி புறப்பட்டது. பிறவாப்புளிய மரத்தை கடக்க முயன்றபோது லாரி புளியமரத்தில் மோதி அதன் கிளை முறிந்தது. இதனால் லாரி அங்கிருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த விபத்தால் மற்ற வாகனங்கள் செல்லமுடியாமல் நீண்ட வரியில் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்ததும் பேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாகனங்களை கோவைப்புதூர் வழியாக திருப்பி விட்டனர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது. கோயில் நிர்வாகத்தின் அனுமதி பெற்ற பின்னரே பிறவா புளியமரத்தின் கிளை வெட்டப்பட்டு லாரியை மீட்க முடியும்.
அதன்படி நிர்வாகத்தின் அனுமதி பெற்று மதியம் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டு லாரி மீட்கப்பட்டது. இதில் பேரூராட்சித் தலைவர் அண்ணாதுரை, செயல்அலுவலர் மணிகண்டன், சிவபக்தர்கள் பேரவையின் ஈடுபட்டனர். பிறவா புளியமரத்தில் லாரி மோதி கிளை சேதமானதால் அசம்பாதவிதம் ஏற்படுமோ? என்று சில பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
The post கோவை அருகே இன்று காலை பட்டீஸ்வரர் கோயில் பிறவா புளிய மரத்தில் காஸ் லாரி மோதி போக்குவரத்து பாதிப்பு: கிளைகள் முறிந்ததால் பக்தர்கள் வேதனை appeared first on Dinakaran.