சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2023-24ம் நிதியாண்டில் மின் நுகர்வு 11,096 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2022-23ம் நிதியாண்டில் 10,354 கோடி யூனிட்களாக மின் நுகர்வு இருந்த நிலையில், அதை விட கடந்த ஆண்டு 742 கோடி யூனிட்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் சராசரியாக 30 கோடி யூனிட்களாக மின் நுகர்வு இருந்து வரும் நிலையில், அதிகபட்சமாக கோடை வெயிலால் கடந்த ஏப்ரல் 30ம் தேதி 45.43 கோடி யூனிட்களாக மின் நுகர்வு அதிகரித்து காணப்பட்டது. வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி. சாதனங்கள், மின்சார வாகனங்களில் எண்ணிக்கை அதிகரிப்பது ஆகியவையே மின் நுகர்வு அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. வீடுகளில் பயன்படுத்தப்படும் சாதனங்களால் கடந்த 2022-23ம் நிதியாண்டில் மின் நுகர்வு 3,060 கோடி யூனிட்களாக இருந்த நிலையில், அந்த அளவு கடந்த நிதியாண்டி 3,226 கோடியாக உயர்ந்துள்ளது.
இதேபோல் உயரழுத்த தொழிற்சாலைகளில் மின் நுகர்வு கடந்த 2022-23ம் நிதியாண்டில் 3,012 கோடி யூனிட்களாக இருந்த நிலையில், அந்த அளவு கடந்த நிதியாண்டில் 3,242 கோடி யூனிட்களாக அதிகரித்தன. விவசாயத்திற்கு கடந்த 2022-23ம் நிதியாண்டில் 1,417 கோடி யூனிட்களாக இருந்த மின் நுகர்வு கடந்த நிதியாண்டில் 1,583 கோடி யூனிட்களாக உயர்ந்துள்ளது. கடந்த 2022-23, மற்றும் 2023-24ம் நிதியாண்டில் தமிழகம் முழுவதும் மின்சார வாகனங்களுக்காக 193 சார்ஜிங் மையங்கள் செயல்பட்ட நிலையில் அவற்றில் 35 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் மின்நுகர்வு அதிகரிப்பு.. கடந்த 2023-24ம் நிதியாண்டில் மின் நுகர்வு 11,096 கோடி யூனிட்களாக உயர்வு!! appeared first on Dinakaran.