- திருச்செந்தூர் கோயில்
- அமைச்சர் ஷேகர்பாபு
- திருச்செந்தூர்
- பாகன் உதயகுமார்
- சிசுபாலன்
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகம்
- இந்து மதம்
- அமைச்சர்
- சேகர்பாபு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் கடந்த 18ம் தேதி யானை தெய்வானை தாக்கியதில் பாகன் உதயகுமார் (49), அவரது உறவினரான சிசுபாலன் (59) ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று குடிலில் உள்ள யானையை பார்வையிட்டார். அதிகாரிகளிடம் யானையின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் உயிரிழந்த பாகன் உதயகுமார் இல்லத்திற்கு சென்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண நிதி ரூ.2 லட்சம், திருக்கோயில் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மற்றும் தக்கார் அருள்முருகன் சார்பில் ரூ.3 லட்சம் என ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை உதயகுமாரின் மனைவி ரம்யா மற்றும் மகள்கள் அக்சரா (15), அகல்யா (14) ஆகியோரிடம் வழங்கினார். யானை தாக்கி உயிரிழந்த சிசுபாலனின் மகள் அக்சயாவுக்கு முதல்வர் பொது நிவாரண நிதி ரூ.2 லட்சம் மற்றும் தக்கார் அருள்முருகன் சார்பில் ரூ.3 லட்சம் என ரூ.5 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில், ஏற்கனவே நடந்த பாதிப்பில் இருந்து தெய்வானை யானை இன்னும் முழுமையாக மீளவில்லை என தற்போது பராமரித்து வருபவர் தெரிவித்தார். புத்துணர்ச்சி முகாம் என்பது வேறு, யானைகளின் தேவைகளை நிறைவு செய்வது வேறு. கடந்த காலங்களில் யானைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அருகில் செய்யப்படாததால் புத்துணர்ச்சி முகாம் தேவைப்பட்டது. தற்போது 26 திருக்கோயில்களில் 28 யானைகளை நாங்கள் பராமரித்து வருகிறோம். எனவே யானை புத்துணர்ச்சி முகாம் என்பது தேவைப்படவில்லை என்றார்.
The post திருச்செந்தூர் கோயிலில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார் appeared first on Dinakaran.