×
Saravana Stores

இந்த வார விசேஷங்கள்

மகாதேவாஷ்டமி 23.11.2024 – சனி

அஷ்டமி திதி கிருஷ்ணருக்கும் துர்க்கைக்கும் சிவனுக்கும் உரியது எனவே பெருமாளை வழிபடுபவர்களும் சிவனை வழிபடுபவர்களும் அம்பாளை வழிபடு பவர்களும் அஷ்டமி அன்று தவறாமல் கோயிலுக்குச் செல்வார்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள்தான் அன்றைக்குச் செய்யக்கூடாதே தவிர, வழிபாட்டுக்கு ஏற்ற அற்புதமான நாள் அஷ்டமியும் நவமியும். அதிலும் தேய்பிறை அஷ்டமி மிக அற்புதமான நாள். குறிப்பாக பைரவமூர்த்திக்கான நன்னாள். பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். எமபயம் இருக்காது. திருமணத் தடை அகலும். பைரவர் சனி பகவானுக்கே ஆசானாக, குருநாதராகப் போற்றப்படுகிறார் என்கிறது புராணம். அதனால், ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டம சனி, சனி திசை புத்தி மற்றும் ராகு – கேது கிரகங்கள் மூலம் வரும் தோஷம் போன்ற கிரக இன்னல்களில் இருந்து நாம் விடுபட வேண்டுமெனில், பைரவரை வணங்கவேண்டும்.

எவரொருவர் தேய்பிறை அஷ்டமி தோறும் விடாமல் பைரவரை வழிபடுகிறார்களோ, அவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். கடன் இருக்காது, பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது பக்தர்களின் அனுபவம். கார்த்திகை மாத அஷ்டமி சிறப்பு வாய்ந்தது. இதை மகாதேவாஷ்டமி என்பார்கள். பைரவாஷ்டமி, வைக்கத்து அஷ்டமி என்றெல்லாம் போற்றுகிறார்கள்.

காலையிலும் மாலையிலும் சிறப்பு வழிபாடுகள் பைரவருக்கு நடைபெறும். சில ஆலயங்களில், காலை 7 மணிக்கெல்லாம் பூஜைகள் நடைபெறும். திருச்சி திருப்பட்டூர் பிரம்மா கோயிலில் உள்ள பைரவருக்கு காலை 10.30 முதல் 12.00 மணிக்குள் ராகுகால வேளையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மாலையில் அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு வடைமாலை சார்த்தி வணங்குவார்கள், பக்தர்கள். மிளகுவடை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். செந்நிறமலர்கள், அரளி மாலை கொண்டு பைரவருக்கு அணிவித்து பிரார்த்தனை செய்யுங்கள். வெண் பொங்கல் நைவேத் தியம் வழங்கி, பைரவ வழிபாடு செய்தால், கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்ப்புகள் அகலும். தீயசக்திகள் அண்டாது.

கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயில் எதிரில் உள்ள அனுமான் திருமஞ்சன சேவை 24.11.2024 – ஞாயிறு

இன்று சூரியனுக்குரிய கிழமை. இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு. காரணம் என்ன என்று சொன்னால், சூரியனைத் தனது குருவாகக் கொண்டவர் ஆஞ்சநேயர். அவருடைய வேகத்துக்கு அவர் கூடவே ஓடி சகல சாஸ்திரங்களையும் கற்றவர். எனவே, இந்த நாளில் சூரிய நமஸ்காரத்தோடு ஆஞ்சநேயரையும் வழிபட்டால் கல்லாத கலைகளும் தானாக வந்துசேரும். திருமலைக்குச் செல்கின்றவர்கள் கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாளை சேவித்துவிட்டு, அந்த ஆலயத்துக்கு நேர் எதிரில் உள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயரையும் வணங்கிவிட்டு, திருமலை யாத்திரையை மேற்கொள்வது சிறப்பானது. இந்த ஆஞ்சநேயர் பிரதான சாலையிலேயே அமைந்திருக்கின்றார். இவருக்கு அனுமன் ஜெயந்தி முதலிய முக்கியமான விசேஷங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. சாதாரண நாட்களில்கூட நிறைய பக்தர்கள் வந்து வழிபடும் ஆலயம். சனிக்கிழமை மற்றும் விசேஷமான நாட்களில் மிகப்பெரிய கூட்டம்கூடும். மிகுந்த வரப்பிரசாதி. நாம் விரும்பியவரத்தை தரக்கூடிய வல்லமை படைத்த இந்த ஆஞ்சநேயருக்கு இன்றைய தினம் விசேஷமான திருமஞ்சன சேவை.

இரண்டாவது சோமவாரம் 25.11.2024 – திங்கள்

இன்று இரண்டாவது கார்த்திகை சோமவாரம் இந்த கார்த்திகையில் நான்கு சோமவாரங்கள் வருகின்றன சோமவார விரதம் என்பது சிவனுக்குரிய எட்டு முக்கிய விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது உத்தமமானது. ஆயினும் கார்த்திகையில் மிக சிறப்பான விரதம் இது. கார்த்திகை மாதத்தைச் சந்திர மாதம் என்பார்கள். காரணம் இந்த மாதத்தில் விரதம் இருந்துதான் தன்னுடைய தோஷத்தை சந்திரன் போக்கிக் கொண்டு சிவனுடைய அன்புக்குப் பாத்திரமாகி அவர் தலைமுடி மீது பிறைச் சந்திரனாக அமரும் வாய்ப்பினைப் பெற்றான். அதனால் சிவபெருமானுக்கு சந்திரசூடன், சந்திர சேகரன், சந்திர மௌலீஸ்வரன் என்றெல்லாம் திருநாமங்கள் ஏற்பட்டன. கார்த்திகை மாதம் சோமவாரத்தில் யாரெல்லாம் சிவபெருமானை நினைத்து விரதமிருக்கின்றார்களோ அவர்களுக்குச் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். அனைத்து நற்காரியங்களும் மிக விரைவாக நிறைவேறும். சுபகாரியத் தடைகள்விலகும். சந்திரனுக்கு சாபம் நீங்கியது போல ஒருவனுடைய ஜன்ம சாபம்நீங்கி நற்கதிகிடைக்கும். சிவபெருமானுடைய மூர்த்தங்களில் ஒன்று சோமாஸ்கந்தர். சிவன் பார்வதி மற்றும் குமாரக் கடவுளாகிய முருகப் பெருமானும் இணைந்த ஒரு அற்புதமான தோற்றம். விழாக்களில் உலா வரும் பஞ்ச மூர்த்திகளில் ஒரு மூர்த்தி தான் இந்த சோமாஸ்கந்த மூர்த்தி. இதில்சத்தாகிய சிவ பெருமானையும் சித்தாகிய அம்பாளையும் ஆனந்த மாகிய முருகப் பெருமானையும் இணைந்து வணங்குகின்ற பொழுது சச்சிதானந்த சொரூபத்தை. ஆராதித்த பலன் நமக்குக் கிடைக்கும். இன்று பல சிவாலயங்களில் 108, 1008 சங்காபிஷேகம் நடைபெறும் இன்றைய தினம் கீழ்க்கண்ட பாடலைப் பாடி சிவபெருமானை ஆராதிக்க வேண்டும்.

“தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

காலையிலிருந்து விரதம் இருந்து சிவாலயத்துக்கு சென்று வில்வத்தால் சிவலிங்கத்தையும் குங்குமத்தால் அம்பாளையும் அர்ச்சனை செய்வது விசேஷமான பலனைத் தரும். தம்பதிகள் ஒற்றுமைக்கும், தீர்க்க சுமங்கலித்துவத்துக்கும் ஒரு அற்புதமான விரதம் கார்த்திகை சோமவார விரதம்.

மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை 25.11.2024 – திங்கள்

நாயன்மார்களில் ஒருவர் மெய்ப்பொருள் நாயனார். பெயருக்கு ஏற்றபடி அவருக்கு எல்லாமே மெய்ப்பொருள்தான். பொய்ப்பொருள்கூட மெய்ப்பொருள்தான் யாரைப் பார்த்தாலும் அவருக்கு சிவபெருமானாகவே தோற்றமளித்தது அவருடைய வாழ்க்கை தியாகமயமானது. திருக்கோவிலூர் என்ற நாட்டை மெய்ப்பொருள் நாயனார் ஆட்சி செய்து வந்தார். தனது மக்களையும் நாட்டையும் மிகுந்த நேர்மையாய் மிகத்தெளிவாக வழி நடத்தினார். இவரின் மேல் பொறாமை கொண்ட முத்தநாதன் என்ற ஒர் அரசன், “மெய்பொருளாரைப் போரில் வெல்ல இயலாத காரியம். ஆதலால் வஞ்சகத்தாலோ சூழ்ச்சியாலேயோ இவரை வீழ்த்த முடியும்” என்று எண்ணியவன் அதற்கான திட்டத்தைத் தீட்டினான்.

யாரைப் பார்த்தாலும் சிவனடியார்களாகவே கருதும் மெய்ப்பொருளால் நாயனாரின் குணத்தைத் தெரிந்துகொண்ட முத்தநாதன் அந்த குணத்தையே ஆயுதமாகப் பயன்படுத்தி அவரைச் சாய்க்க நினைத்தான் அதற்கான சதித்திட்டத்தைத் தீட்டினான் முத்தநாதன், அடியவர் போல் வேடம் தரித்து, இடுப்பில் ஒரு கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு இரவில் மெய்ப்பொருளாரின் அரண்மனைக்கு வந்தான். அடியவர் போல் வேடம் தரித்து வந்த முத்தநாதனை சந்தேகம் கொண்ட காவலாளி தத்தன், தடுத்து நிறுத்தினான். “இது இரவுவேளை. இந்த நேரத்திலே மன்னரைச் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? நீங்கள் அடியாராக இருந்தால் காலையில் சந்திக்கலாம். இப்பொழுது அனுமதிக்க முடியாது அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்”

“நான் அரசருக்கு வேதப்பொருள் கூறும் பொருட்டு வந்துள்ளேன்.

என்னைத் தடுக்காதே…”அடியவர்கள் எந்த நேரமும் மன்னரைச் சந்திக்கலாம் என்ற உத்தரவு இருப்பதால் காவலாளி அவரை உள்ளே அனுப்பினான். இருந்தாலும் அவனுக்குப் போலி அடியவர் மேல் ஒரு சந்தேகம் இருந்தது.
போலி அடியவர், அரசரின் அறைக்குச் சென்றான். அடியவரைக் கண்டதும் மெய்ப்பொருளார் எழுந்து அவரை வணங்கினார். “அடியவரே, இந்நேரத்தில் என்னைக் காண வந்ததன் நோக்கம் என்னவோ?”

போலி அடியவர் முத்தநாதனும், “மன்னனே, நீ சிவபெருமானுக்குப் பிரியமானவன் அதனால் உன்னிடத்தில் சொல்ல வேண்டிய ஒரு பொருளை அவசியம் சொல்லச் சொல்லி என்னை இந்த நேரத்திலே அனுப்பி வைத்தான். நாம் பேசுகின்ற இந்த அறையிலே மகாராணி கூட இருக்கக் கூடாது அவ்வளவு ரகசியமான விஷயம் இது”

இப்படிச் சொல்லியவுடன் அங்கே இருந்த மகாராணியையும் மன்னன் வெளியே அனுப்பிவிட்டு கண் மூடி எதிரிலே கைகூப்பி இருந்தார். இப்பொழுது முத்த நாதன், இடையில் சொருகி இருந்த கத்தியை எடுத்து மெய்ப்பொருளாரின் நெஞ்சில் குத்தினான்.

“அடியவரே…’’ என்று இருகைக்கூப்பியவாறு மன்னன் சரிந்தான். சந்தேகம் கொண்ட மன்னரின் மெய்க்காவலனான தத்தன் ஓடி வந்து தனது உடைவாளை எடுத்து போலி அடியாரை தாக்க வந்த சமயத்தில், “தத்தனே… இவர் அடியவர்… இவரை ஒன்றும் செய்யாதே” என்றார்.

“நீ ஏதாவது எனக்கு உதவி செய்ய வேண்டி இருந்தால் நான் சொல்வதைச் செய்… இவருக்கு தீங்கு ஏதும் நேராதபடி இவரைப் பாதுகாப்புடன் இவர் நாட்டுக்கு அனுப்பி வைப்பாயாக’’ என்றார். காவலாளி தத்தனும் அரசனின் கட்டளைப்படி, வஞ்சகன் முத்தநாதனை நகரின் எல்லை வரை பாதுகாப்புடன் அனுப்பி வைத்து அந்த விவரத்தை மெய்ப்பொருள் நாயனாரிடம் தெரிவித்தான். மெய்ப்பொருளார் மகிழ்வுடன் தத்தனுக்கு நன்றி தெரிவித்த சமயம், சிவபெருமான் நாயனாருக்குத் திருக்காட்சி தந்து சிவபதம் தந்தருளினார். அவருடைய குருபூஜை என்று எல்லா சிவாலயங்களிலும் மிக விரிவாக நடைபெறும்.

25.11.2024 – திங்கள் – ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பாலாபிஷேகம்.
26.11.2024 – செவ்வாய் – ஆனாயர் நாயனாரின் குருபூஜை.
26.11.2024 – செவ்வாய் – சர்வ ஏகாதசி.
26.11.2024 – செவ்வாய் – ஸ்ரீரங்க
மன்னார் ஆண்டாள் கண்ணாடி சேவை.
28.11.2024 – வியாழன் – மகாபிரதோஷம்.
28.11.2024 – வியாழன் – சுவாதி லட்சுமி நரசிம்மர் பூஜை.
29.11.2024 – வெள்ளி – மாத சிவராத்திரி.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Mahadevashtami ,Shani Ashtami Tithi ,Shiva ,Perumala ,Ambala ,Ashtami ,
× RELATED நெல்லிக்குப்பம் பாலூர் சிவன் கோயில்...