- ஜார்க்கண்ட்
- கட்பாடி ரயில்வே காவல்
- காட்பாடி ரயில் நிலையம்
- உமாமகேஸ்வரன்
- Ampur
- சென்னை
- கட்பாடி ரயில்வே போலீஸ்
வேலூர், நவ.23: காட்பாடி ரயில் நிலையத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வாலிபரிடம் 17 விலை உயர்ந்த திருட்டு செல்போன்களை ரயில்வே போலீசார் கைப்பற்றினர். கடந்த அக்டோபர் 22ம் தேதி ஆம்பூரை சேர்ந்த உமாமகேஸ்வரன்(29) என்பவர் ஆம்பூரில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது ₹1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருட்டு போனது. இதுதொடர்பாக அவர் காட்பாடி ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், காட்பாடி ரயில்வே இன்ஸ்பெக்டர் ருவாந்திகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அன்று மாலை காட்பாடி ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்து கொண்டிருந்த வாலிபரை பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே, அவரிடம் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஜார்கண்ட் மாநிலம் சாஹேப்கஞ்ச் மாவட்டம் நயாடோலா கல்யாணி பகுதியை சேர்ந்த குந்தன்குமா மேட்டோ(26) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் அன்று காலையில் ஆம்பூர் உமாமகேஸ்வரனிடம் செல்போனை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில், அவர் தங்கியிருந்த இடத்தில் இருந்த ₹1 லட்சத்துக்கும் மேல் மதிப்புடைய 4 விலை உயர்ந்த செல்போன்களும், ₹30 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் மதிப்புள்ள 13 செல்போன்களும் கைப்பற்றப்பட்டது. இவற்றை பல்வேறு ரயில் நிலையங்களிலும், பிற இடங்களிலும் திருடியது என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து அந்த செல்போன்களின் ஐஎம்இஐ எண்கள் உதவியுடன் செல்போன் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, காட்பாடி ரயில்வே போலீஸ் நிலையம் வந்த பாலக்காட்டை சேர்ந்த சுப்பிரமணி(59), பாண்டிச்சேரியை சேர்ந்த கதிர்வேல்(54), தட்சிணாமூர்த்தி(58), சிவராமன்(58), விழுப்புரத்தை சேர்ந்த பாலமுருகன்(34), பாலாஜி(36), சீனிவாசன், கோயம்புத்தூரை சேர்ந்த உத்தமாறன்(44), பவானியை சேர்ந்த சுரேஷ்குமார்(42), லிங்கேஷ்(22), ஈரோட்டை சேர்ந்த தீபக்(38), கிருஷ்ணமூர்த்தி, மதுரையை சேர்ந்த சரவணகுமார், காரைக்காலை சேர்ந்த அரவிந்த்குமார்(29), திருப்பூரை சேர்ந்த கோவிந்தராஜ்(64), காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரதீப்குமார்(25), வாலாஜா மோட்டூரை சேர்ந்த இளையராஜா(42) ஆகியோரிடம் செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டன. எஸ்எஸ்ஐக்கள் பத்மராஜா, புஷ்பா, சுமதி மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படையினர் கலந்து கொண்டனர்.
The post 17 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் ஜார்கண்ட் வாலிபர் கைது காட்பாடி ரயில்வே போலீசார் அதிரடி appeared first on Dinakaran.