×
Saravana Stores

மாஜி அமைச்சர் வேலுமணி முன்னிலையில் நெல்லை அதிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் பயங்கர மோதல்: கும்பகோணத்திலும் கும்மாங்குத்து


நெல்லை: நெல்லையில் இன்று நடந்த அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் மாஜி அமைச்சர் வேலுமணி முன்னிலையில் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதேபோல் கும்பகோணத்திலும் நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்த கள ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள், ஏம்எல்ஏக்கள் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் நெல்லையில் மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட நெல்லை, பாளை சட்டமன்ற தொகுதி கள ஆய்வு கூட்டம் சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, வரகூர் அருணாசலம் ஆகியோர் கள ஆய்வு பணிக்காக சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளரும், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான பாப்புலர் முத்தையா பேசுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை விட குறைந்த ஓட்டுகளே வாங்கி உள்ளோம். கடந்த காலங்களில் 47 ஆயிரம் ஓட்டு வித்தியாசம் என்று இருந்ததை நான் மாவட்ட செயலாளராக இருந்தபோது 4 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திற்கு கொண்டு வந்தேன். ஆனால் கடந்த ேதர்தலில் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தோம். தற்போது புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளில் பலர் இளைஞர்களாக உள்ளனர். கடந்த வாரம் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் பல வார்டுகளில் அதிமுக நிர்வாகிகள் யாருமே இல்லை என்பதை நான் பார்த்தேன். மாவட்ட செயலாளர் சேலத்திற்கு சென்று விட்டார். அவர், வேறொரு நாளில் சேலத்திற்கு சென்று இருக்கலாம். பூத் கமிட்டிக்கு 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் வாக்காளர் சேர்ப்பு முகாமில் யாருமே இல்லாதது வருந்தத்தக்கது என்று பேசினார். இவ்வாறு அவர் பேசியதும், மாவட்ட செயலாளர் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். மேலும் பாப்புலர் முத்தையாவுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். அமமுகவிற்கு சென்று வந்தவர்கள் எல்லாம் பேசுவதற்கு அருகதை கிடையாது என்று கூறினர். இதனால் பாப்புலர் முத்தையா ஆதரவாளர்களுக்கும், மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். இதனால் கூட்டம் போர்க்களம் போல் காட்சியளித்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாஜி அமைச்சர் வேலுமணி, தகராறு செய்பவர்கள் வெளியே செல்லலாம், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மைக்கில் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் அதை பொருட்படுத்தாமல் மாவட்ட செயலாளரை எப்படி குறைத்து பேசலாம் என்று தச்சை கணேசராஜாவின் ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் எம்பி முத்துகருப்பன், மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர். மாஜி அமைச்சர் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் மோதிக் கொண்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கும்பகோணம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் செக்காங்கண்ணி சாலையில் உள்ள மண்டபத்தில் தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக்கூட்டம் இன்று காலை நடந்தது. மாவட்ட செயலாளர் பாரதிமோகன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஆர்.காமராஜ் மற்றும் முன்னாள் அரசு கொறாடா மனோகரன் பங்கேற்றனர். இதில் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடியும் தருவாயில் நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர் அம்பிகாபதி எழுந்து, மேடையில் தலைவர்கள் மட்டுமே பேசக்கூடாது, நிர்வாகிகளையும் பேச அனுமதிக்க வேண்டும் என்றார். இதற்கு மற்ற நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர்.

அப்போது அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அம்பிகாபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் மேடையில் ஏற முயன்றனர். அவர்களை மேடையில் இருந்தவர்கள் தடுத்து கீழே தள்ளியதால் அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்செட் ஆன திண்டுக்கல் சீனிவாசன், பிரச்னை கிளப்பிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள், தொண்டர்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு, வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post மாஜி அமைச்சர் வேலுமணி முன்னிலையில் நெல்லை அதிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் பயங்கர மோதல்: கும்பகோணத்திலும் கும்மாங்குத்து appeared first on Dinakaran.

Tags : Kumbakonath ,Kummanguthu ,Majhi Minister ,Velumani ,Nelu Atamuga ,Nella ,Maji Minister Velumani ,Kumbakonam ,2026 Legislative Assembly ,Tamil Nadu ,Nelu Aimuga Meeting ,Maji Minister ,Kumbakonatham Kummanguthu ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா மாஜி அமைச்சர் கொலையில்...