×
Saravana Stores

சின்னசேலத்தில் பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிக கடைகள் அகற்றம்

*விரிவாக்கப்பணி மும்முரம்

சின்னசேலம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ளது. சின்னசேலத்தை சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சின்னசேலத்தில் இருந்து கூகையூர், நைனார்பாளையம், வி.மாமந்தூர், குரால், நாககுப்பம், கல்லாநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் பகுதிக்கும் பேருந்துகள் செல்கின்றன. அதுமட்டுமில்லாமல் சின்னசேலம் வழியாக திருச்சி, பெரம்பலூர், சேலம், கோவை, விழுப்புரம், கடலூர், பாண்டி, சென்னை போன்ற பெரு நகரங்களும் ஏராளமான பேருந்துகள் செல்கின்றன. ஒரு நாளைக்கு சுமார் 150 பேருந்துகள் சின்னசேலம் பேருந்துநிலையம் வழியாக சென்று வருகின்றன.

இவ்வழியாக தினசரி நகர்ப்புற மற்றும் புறநகர் பேருந்துகள் சென்றபோதிலும் இங்குள்ள பேருந்துநிலையம் குறுகலாக இருப்பதால் சேலம், சென்னை செல்லும் பேருந்துகள் சாலையோரம் நின்றும், கிராமப்புற பேருந்துகள் வெளிப்புறத்தில் நின்றும் பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால் விபத்துகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சின்னசேலம் பேருந்துநிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சின்னசேலம் பேருந்துநிலையத்தை விரிவுபடுத்த ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகமும் சின்னசேலம் பேருந்துநிலையத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து, நடுவில் இருந்த சுகாதாரத்துறை கட்டிடங்களை பேரூராட்சி நிர்வாகம் இடித்து அகற்றியது. அதேபோல பஸ்நிலையத்தின் மையத்தில் இருந்த ஒரு ஹோட்டல், ஒரு பயணிகள் காத்திருப்பு அறை மற்றும் 7 கடைகளை கொண்ட அடுக்குமாடி வணிக வளாக கட்டிடத்தை பொக்லைன் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். பஸ்நிலைய வளாகத்தில் இருந்த கட்டிடங்களை அகற்றிய பிறகு விசாலமாக உள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவின்படி அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த 25 தற்காலிக கடைகளையும் பஸ்நிலைய விரிவாக்கப் பணிக்கு ஏதுவாக அகற்ற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நேற்று 25க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்களும் அங்கு போடப்பட்டிருந்த கொட்டகைகளை பிரித்து அகற்றிக்கொண்டனர். தற்போது சின்னசேலம் பேருந்துநிலைய வளாகம் சுமார் 2 ஏக்கர் அளவில் பரந்து காணப்படுகிறது. இந்த பகுதியில் சிமெண்ட் தளம் அமைத்து பஸ்நிலையம் கட்டினால் பயணிகளுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று பேருந்து ஓட்டுநர்கள், பயணிகள், பொதுமக்கள், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

The post சின்னசேலத்தில் பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிக கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Kallakurichi ,Salem-Chennai highway ,Kookaiyur ,Nainarpalayam ,V. Mamandur ,Kural ,Nagakuppam ,Kallanattam ,Kachirayapalayam ,
× RELATED ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி