சென்னை: இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாடு மீனவர்கள் 5 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் விமானம் மூலம் சென்னை வந்த மீனவர்களை அதிகாரிகள் வரவேற்றனர். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி அதிகாலை விசைப்படகில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படை மீனவர்களை சுற்றி வளைத்து. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி மீனவர்களை கைது செய்து படகுகள், மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
அதன்பின் இலங்கை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி மீனவர் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சரும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் அவசர கடிதம் எழுதி மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனை அடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்கள் , ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒருவர் என 5 மீனவர்களை விடுதலை செய்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்திய தூதரக அதிகாரிகள் 5 பேரையும் தங்களுடைய பராமரிப்பில் சில நாட்கள் வைத்திருந்து அதன்பின் அவர்களை இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன் கீழ் 5 பேரையும் தூதரக அதிகாரிகள் விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்து நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 5 மீனவர்களையும் அனுப்பிவைத்தனர். இதனை அடுத்து சென்னை விமானநிலையம் வந்தடைந்த 5 மீனவர்களையும் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கை சிறையிலிருந்து 5 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பி இருப்பது மீனவர்கள் வட்டாரத்தில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாடு மீனவர்கள் 5 பேர் விடுதலை: விமான நிலையத்தில் மீனவர்களை வரவேற்ற அதிகாரிகள் appeared first on Dinakaran.