- அமைச்சர்
- தா.மோ.
- அன்பராசன்
- திருவள்ளூர்
- மொ.
- அன்பரசன்
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
- கலெக்டர் அலுவலகம்
- அமைச்சர் தா. மோ.அன்பரசன்
திருவள்ளூர்: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் 8,032 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தி உள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்தும் மற்றும் குடியிருப்புகளுக்கான பயனாளிகளை தேர்வு செய்வது குறித்தும் ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் விஜயகார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், டி.ஜே.கோவிந்தராஜன், ச.சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டு வசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் கலைஞரால் 1970ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் 1.9.2021 அன்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னை மாநகரில் உள்ள 209 திட்டப் பகுதிகளில் 1,21, 960 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு பராமரிப்பில் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்காக 9 திட்டப் பகுதிகளில் ரூ.1,106.73 கோடி மதிப்பில் 8,032 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், தாழவேடு திட்டப்பகுதியில் 520 குடியிருப்புகளும், முருகம்பட்டு திட்டப்பகுதியில் 1,040 குடியிருப்புகளும், பூச்சிஅத்திபேடு திட்டப்பகுதியில் 1,152 குடியிருப்புகளும், அருங்குளம் பகுதி – 1 திட்டப்பகுதியில் 432 குடியிருப்புகளும், அருங்குளம் பகுதி – 2 திட்டப்பகுதியில் 912 குடியிருப்புகளும், அருங்குளம் பகுதி – 3 திட்டப்பகுதியில் 768 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் 90 சதவீதத்திற்கு மேல் முடிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் துணை மின் நிலையங்கள் போன்ற சில பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளது.
அவைகளும் 3 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு குடியிருப்புகள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும். மப்பேடு திட்டப்பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாக்கம் மற்றும் நூம்பல் திட்டப்பகுதிகளில் நீதிமன்ற வழக்குள் விரைவில் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என கூறினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், வாரிய செயலாளர் நா.காளிதாஸ், வாரிய தலைமை பொறியாளர் சு.லால்பகதூர், வாரிய மேற்பார்வை பொறியாளர் கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் 8,032 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.