பவானி,நவ.21:பவானி கூடுதுறையில் காவிரி மற்றும் பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குவிந்திருந்த குப்பைகள் நேற்று அகற்றும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலா மற்றும் பரிகாரத் தலமான காவிரி,பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் பக்தர்களால் வீசப்படும் துணிகள்,பரிகார கழிவுகள் தேங்கி கிடப்பதாக தினகரனில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை அதிகாரிகள் நேற்று கூடுதுறை சுற்றுப்புற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, கோயில் நிர்வாகம் சார்பில் தேங்கி கிடந்த குப்பைகள், துணிகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. பவானி ஆற்றங்கரைக்குள் கழிவுகள் மற்றும் உணவு கழிவுகள் வீசாமல் இருக்க ஏற்கனவே தடுப்புகள் கட்டப்பட்டுள்ளது. மேலும், கழிவுகள் போடப்படுவதை தடுக்க கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பக்தர்களுக்கு விழிப்புணர்வு பலகைகள் வைத்து அறிவுறுத்தவும் கழிவுகளை திறந்து வெளியில் வீசுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கூடுதுறை வளாகத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு பக்தர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
The post பவானி கூடுதுறையில் தூய்மைப் பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.