×
Saravana Stores

நெல்லிக்குப்பம் பாலூர் சிவன் கோயில் அருகே சோழர் கால தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே பாலூர் சிவன்கோயில் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால தூண் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் கெடிலம் ஆற்றின் கரையோரம் சிவன் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே பழங்கால தூண் கல்வெட்டு இருந்தது நேற்று கண்டெடுக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, பேராசிரியர் வேல்முருகன் ஆகியோர் அப்பகுதிக்கு நேற்று நேரில் சென்று அந்தத் தூணில் குறிக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின் தொல்லியல் நிபுணர்கள் கூறியதாவது: இந்தத் தூணில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு விக்கிரம சோழ மன்னரின் 5ம் ஆட்சி வருடத்தை (கி.பி.1125) சேர்ந்தது. உருண்டைத் தூணில் 30 வரிகள் இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கல்வெட்டு சிதைந்துள்ளது. இவ்வூர் சிவன் கோயிலுக்கு சோழர்கால பாலூர் கிராம பொதுமக்கள் தேவ தானமாக வரி நீக்கி இறையிலியாக கொடை அளித்த நிலங்களைப் பற்றிய செய்தியை இக்கல்வெட்டு விரிவாகக் கூறுகிறது.

கல்வெட்டில் பாலூரை சோழ கேரள நல்லூர் என்று கூறுகிறது. கணிச்சைப்பாக்கமுடையான் அரையன், சோழமார்த்தாண்ட மூவேந்த வேளான் ஆகியோர் மூலம் நிலங்கள் பெறப்பட்டு சிவனுக்கு கொடை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் விக்கிரமசோழரின் ஆட்சியில் நிலவிய ‘பதிநாலு அடிக்கோல்’ எனும் அளவுகோலால் அளக்கப்பட்டுள்ளது. நிலங்களின் நான்கு எல்லைகள் பற்றிய விவரம் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. நிலத்துக்கு விலை அளிக்கப்பட்ட தொகை அக்கால சோழப் பேரரசில் புழக்கத்தில் இருந்த ‘அன்றாடு நற்காசு’ எனும் காசால் குறிக்கப்பட்டுள்ளது.

உலகளந்தகோல், பாதகோல், கடிகை களத்துக்கோல், மாளிகைக் கோல் ஆகியவை சோழர் ஆட்சியில் இருந்த நில அளவுகோல்கள். இவை பன்னீரடி, பன்னிருசாண் ஆகிய அளவுகளிலும் 16, 18, 24 ஆகிய அடி அளவுகளிலும் இருந்தன. இந்த அளவுகள் ஆட்சியில் இருக்கும் மன்னரின் கால் திருவடி அல்லது கைமுழம் அளவுகளாகும். தற்போது கிடைத்த இந்தக் கல்வெட்டின் மூலம் பதிநாலு அடிக்கோல் எனும் அளவுகோல், விக்கிரம சோழரின் ஆட்சியில் புழக்கத்தில் இருந்தது என்பது தெரியவந்துள்ளது.

The post நெல்லிக்குப்பம் பாலூர் சிவன் கோயில் அருகே சோழர் கால தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Nellikuppam Balur Shiva Temple ,Balur Shiva temple ,Nellikuppam ,Cuddalore District ,Shiva ,Kedilam River ,Balur ,
× RELATED கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம்...