×
Saravana Stores

மதுரை மாவட்ட குடிநீர், பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 2ம் கட்டமாக தண்ணீர் திறப்பு: வினாடிக்கு 500 கனஅடி வீதம் வெளியேற்றம்

ஆண்டிபட்டி: மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்காக வைகை அணையில் இருந்து இன்று காலை முதல் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, 71 அடி உயர வைகை அணை உள்ளது. இதில் தேக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்கள் பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறுகின்றன. 10 நாட்களுக்கு முன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உயர்ந்தது. இதையடுத்து அணையின் பூர்வீக பாசனப் பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக ஆற்றுப்படுகை வழியாக 3 கட்டங்களாக 27 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனடிப்படையில், முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த 9 நாட்களாக வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு, நேற்று காலை நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக இன்று காலை 6 மணி முதல் வினாடிக்கு 500 கனஅடி வீதம் ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வருகிற 29ம் தேதி வரை 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். அதன்பின்னர் 3ம் கட்டமாக சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 57.97 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,171 கனஅடியாக உள்ளது. மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில், அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதால், நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

The post மதுரை மாவட்ட குடிநீர், பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 2ம் கட்டமாக தண்ணீர் திறப்பு: வினாடிக்கு 500 கனஅடி வீதம் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Vaigai Dam ,Madurai district ,Andipatty ,Theni district ,Dinakaran ,
× RELATED வைகை அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு..!!