திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி கம்பர் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (38). இவர் அங்குள்ள ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இந்த ஓட்டல் எதிரே ஒரு டிபன் கடையும் இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 17ம் தேதி அங்குள்ள சாய்பாபா கோயில் எதிரே உள்ள ஓட்டல் உரிமையாளருக்குச் சொந்தமான அறையில் பரோட்டா மாஸ்டர் பால்ராஜ் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது டிபன் கடையின் உரிமையாளர் குமார் என்பவரின் மகன் தனுஷ் (21) நள்ளிரவு 12 மணிக்கு மேல் பால்ராஜ் தூங்கி கொண்டிருந்த இடத்திற்கு வந்து அறையின் கதவை தட்டியுள்ளார்.
அப்போது, பால்ராஜ் கதவைத் திறந்து என்னவென்று தனுஷிடம் கேட்டுக்கொண்டிருக்கையில் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பால்ராஜின் வலது பக்க கழுத்தில் வெட்டிவிட்டு அங்கிருந்து தனுஷ் தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த பால்ராஜை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய பால்ராஜ் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். தொழில் போட்டி காரணமாக பரோட்டா மாஸ்டர் பால்ராஜை தனுஷ் கத்தியால் வெட்டியது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனுஷை நேற்று கைது செய்தனர்.
The post தொழில் போட்டி காரணமாக பரோட்டா மாஸ்டருக்கு வெட்டு: வாலிபர் கைது appeared first on Dinakaran.