×
Saravana Stores

அறநிலையத்துறை இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து டவுனில் பொதுமக்கள் மறியல்: கோர்ட் உத்தரவின்படி அடுத்த கட்ட நடவடிக்கை என அதிகாரிகள் அறிவித்ததால் போராட்டம் வாபஸ்

நெல்லை: அறநிலையத்துறை இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து டவுனில் மக்கள் நடத்திய மறியல் வாபஸ் பெறப்பட்டது. கோர்ட் உத்தரவின்படி அடுத்த கட்ட நடவடிக்கை என அதிகாரிகள் அறிவித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். டவுன் குற்றாலம் ரோடு காட்சி மண்டபம் சாலையில் சுமார் 28 வீடுகள் திருஞானசம்பந்தர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக இப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர். இதற்காக மாநகராட்சியில் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், மின்கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறி, வீடுகளை காலி செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றம் விசாரணை நடத்தி, வீடுகளை காலி செய்ய கால அவகாசத்தை பொதுமக்களுக்கு வழங்கியது.

இதற்கிடையே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சென்னை, மதுரை ஐகோர்ட் கிளைகளில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இப்பகுதி மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றி, ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின் பேரில் துணை ஆணையர் கவிதா மற்றும் அதிகாரிகள் இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் கவிதா தலைமையில் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், ‘‘ வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில் எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும்.’’ என்றனர்.

இவர்களுக்கு நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் கணேசராஜா, பாஜ மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நயினார் பாலாஜி, மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், கவுன்சிலர் சந்திரசேகர் ஆகியோர் ஆதரவு தெரிவித்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை 2 நாட்களுக்கு ஒத்தி வைப்பதாகவும், கோர்ட் உத்தரவின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் பிற்பகல் 12.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.

The post அறநிலையத்துறை இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து டவுனில் பொதுமக்கள் மறியல்: கோர்ட் உத்தரவின்படி அடுத்த கட்ட நடவடிக்கை என அதிகாரிகள் அறிவித்ததால் போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Charity Department ,Town Courtalam Road Show Hall ,Dinakaran ,
× RELATED ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ள...