×
Saravana Stores

நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் சோலார் பேனல் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி: 3,150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல்

சென்னை: நெல்லை மாவட்டம், கங்கை கொண்டானில் அமையவிருக்கும் சோலார் பேனல் தொழிற்சாலைக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தமிழ்நாட்டில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழக இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் விக்ரம் மின்உற்பத்தி நிறுவனம் தங்களின் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க முன்வந்தன. அந்தவகையில், நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் சிப்காட்டில் 146 ஏக்கரில் ரூ.1,260 கோடி முதலீட்டில் சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டிருந்தது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி அந்நிறுவனம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது, அதற்கான அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியுள்ளது. மேலும், இந்த தொழிற்சாலையில் 3 ஜிகா வாட் சோலார் செல் மற்றும் பிவி சோலார் மாடியூர் உற்பத்தி செய்ய விக்ரம் சோலார் மின்உற்பத்தி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால், 3,150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதன்மூலம் தமிழ்நாடு அரசின் அடுத்த 10 ஆண்டுகளில் சோலார் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தை எளிதாக அடைய முடியும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, கங்கைகொண்டான் சிப்காட்டில் டாடா நிறுவனத்தின் டிபி. சோலார் (டி.பி.எஸ்.எல்) நிறுவனம் 313.53 ஏக்கர் நிலப்பரப்பில் சோலார் செல் மற்றும் மாட்யூல் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் சோலார் பேனல் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி: 3,150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Nella District Gangai Kondan ,Chennai ,Environmental Impact Assessment Commission ,Tamil Nadu ,Nella District, Gangaikondan ,Nelly District Gangai Kondan ,Dinakaran ,
× RELATED கங்கைகொண்டானில் சோலார் பேனல் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி