×
Saravana Stores

தெலுங்கு பெண்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரம்; புழல் சிறையில் உள்ள நடிகை கஸ்தூரி அடுத்தடுத்து 6 வழக்குகளில் கைதாகிறார்: 3 நாள் காவலில் எடுக்க போலீஸ் முடிவு

சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரியை, தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து 6 வழக்குகளில் போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், கஸ்தூரியை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பிராமணர்கள் சங்கம் சார்பில் கடந்த 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு 18 நிமிடங்கள் பேசினார். அப்போது தெலுங்கு சமுதாய பெண்கள் அனைவரும் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ராஜாவுக்கு அந்தப்புற வேலை செய்ய வந்தவர்கள் என்றும் அவர்கள் தமிழர்கள் என்று கூறுவதாக கஸ்தூரி கடுமையாக விமர்ச்சித்திருந்தார்.

தெலுங்கு பேசும் மக்கள் மற்றும் பெண்களை குறித்து நடிகை கஸ்தூரியின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இது தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மக்கள் மற்றும் தெலுங்கு பேசும் பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்படி, எழும்பூர் போலீசார் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. பின்னர் கடந்த 10 நாட்களாக வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான மகளிர் காவலர்கள் கொண்ட 2 தனிப்படையினர் நேற்று முன்தினம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பஞ்சகுட்டா என்ற இடத்தில் உள்ள சினிமா தயாரிப்பாளர் அரிஹரன் என்பவரின் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த போது அதிரடியாக நடிகை கஸ்தூரியை கைது ெசய்தனர்.

பின்னர் சாலை மார்கமாக போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து எழும்பூர் 5வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தி வரும் 29ம் தேதி வரை போலீசார் மத்திய புழல் மகளிர் சிறையில் நடிகை கஸ்தூரியை அடைத்தனர். இதற்கிடையே நடிகை கஸ்தூரி மீது கோயம்பேடு காவல் நிலையத்தில் தெலுங்கு அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார். இந்த புகார்கள் மீது வழக்கு பதிவுசெய்வது குறித்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது நடிகை கஸ்தூரி மீது இரு சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் கும்பகோணம் மற்றும் கோவை என தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 6 இடங்களில் நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையம் போலீசார் மற்றும் கோவை மாநகர போலீசார் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரியை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே மதுரை உயர் நீதிமன்ற கிளை நடிகை கஸ்தூரியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த போதே, நடிகை கஸ்தூரியை கைது செய்ய இரண்டு மாவட்ட போலீசாரும் தனித்தனியாக தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். ஆனால் அதிரடிய சென்னை பெருநகர காவல்துறையின் தனிப்படை போலீசார் நடிகை கஸ்தூரியை கைது செய்துவிட்டனர்.

எனவே திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் கோவை போலீசார் புழல் சிறையில் உள்ள நடிகை கஸ்தூரியை கைது செய்வதற்கான கைது வாரண்டுடன் சென்னைக்கு செல்ல தயாராக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  இதற்கிடையே கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த எழும்பூர் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏன் என்றால், நடிகை கஸ்தூரியை சிலர் திட்டமிட்டு பின்னால் இருந்து இரு சமூகத்திற்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் பேச தூண்டியதாக கூறப்படுகிறது.

அதேநேரம் நடிகை கஸ்தூரி கைதுக்கு முன்பு அவர் பேசிய வீடியோவை, கைது செய்து சிறையில் அடைத்த பிறகு திட்டமிட்டு வெளிநபர்கள் மூலம் கஸ்தூரி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. எனவே நடிகை கஸ்தூரியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்தும், இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்த ஏன் அவர் முயற்சி செய்கிறார் என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தெலுங்கு பெண்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரம்; புழல் சிறையில் உள்ள நடிகை கஸ்தூரி அடுத்தடுத்து 6 வழக்குகளில் கைதாகிறார்: 3 நாள் காவலில் எடுக்க போலீஸ் முடிவு appeared first on Dinakaran.

Tags : Kasthuri ,Puzhal jail ,Chennai ,Tamil Nadu ,
× RELATED நடிகை கஸ்தூரியை கைது செய்ய போலீஸ் தீவிரம்