மதுரை: கூட்டணிக்காக நாங்கள் ஒன்றும் அதிமுகவிடம் அப்ளிகேஷன் போடவில்லை என எச்.ராஜா கூறியுள்ளார். மதுரை புதூர் தாமரை தொட்டி பகுதியில் உள்ள பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக பாஜ ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா நேற்று வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை டாக்டர் விவகாரம் கண்டிக்கத்தக்கது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் என்ன செய்யும் என்று நோயாளிகளுக்கு புரியுமா? என்ன மருந்தை மருத்துவர் பரிந்துரைத்தார் என விளக்கம் கொடுக்க வேண்டும் என்று சொல்வது முறையல்ல. மருத்துவர் என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என நோயாளிகளிடம் கேட்டு கொடுக்க முடியுமா? மருத்துவர் அந்த நோய்க்கு ஏற்ப சிகிச்சை கொடுப்பார்.
இது போன்ற நிகழ்வினால் இனி வரும் காலங்களில் மருத்துவர்கள் உயிர்காப்பு சிகிச்சைகளுக்கு மருத்துவம் அளிக்க மாட்டோம் என கூறிவிட்டால் என்ன செய்வது? கூட்டணி குறித்து எந்த கருத்துமே நான் சொல்ல மாட்டேன். பாஜ கூட்டணியை தலைமை தான் முடிவு செய்யும். மத்திய தலைமையின் 16 மூத்த தலைவர்கள் என்ன முடிவு எடுத்தாலும், அதை செயல்படுத்தும் இடத்தில் நான் உள்ளேன். புதிய கூட்டணி குறித்து மத்தியில் உள்ள தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன். கூட்டணிக்காக நாங்கள் ஒன்றும் அதிமுகவிடம் அப்ளிகேஷன் போடவில்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அவர்களுக்காக காத்திருக்கவில்லை. ஏற்கனவே எங்களுடன் பயணிப்போருடன் கூட்டணி தொடர்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* பாஜவை கூட்டணிக்கு கூப்பிடல மற்ற கட்சியதான் கூப்பிட்டோம்: தெளிவுபடுத்திய எடப்பாடி
கிருஷ்ணகிரி: பாஜவை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவில்லை, மற்ற கட்சிகளுக்குத்தான் அழைப்பு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த எமக்கல்நத்தம் கிராமத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு நாடு முழுவதும் வேளாண் நிலங்களை, நவீன டிஜிட்டல் முறைக்கு மாற்ற, சர்வே செய்ய நிதி ஒதுக்கி உள்ளது. இந்த பணியில் தமிழகத்தில் வேளாண் மாணவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். படிக்க வந்த மாணவர்களை, சர்வே பணிக்கு பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது. சர்வேயின் போது, சில மாணவிகளை பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் கடித்துள்ளது.
இனி எந்தக் காலத்திலும் பாஜவுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே பலமுறை தெளிவாக சொல்லி விட்டோம். தெளிவாக பேட்டியும் கொடுத்துள்ளேன். ஆனாலும் வேண்டும் என்றே திட்டமிட்டு கேள்வி கேட்கப்படுகிறது. ஏற்கனவே நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைக்கவில்லை. வரப்போகும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி இல்லை என்பதை தெளிவாக சொல்லிவிட்டோம். வர இருக்கிற 2026சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு அதிமுக வேண்டுகோள் விடுப்பது பாஜ.,அல்லாத மற்ற கட்சிகளுக்குத்தான். பாஜவோடு இனிமேல் எங்களுக்கு ஒட்டும் இல்லை. உறவும் இல்லை என்பதை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக செயற்குழு கூட்டங்களில், இளைஞர்களின் வாக்குகளை அதிகரிக்க வேண்டும் என பேசப்படுகிறது. தற்போது நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், இப்படி நடக்கிறதா? என்பது கற்பனையான கேள்வி. தேர்தல் வரும் போது தான், யாருக்கு யார் வாக்களித்தார்கள் என்பது தெரியவரும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
The post கூட்டணிக்காக அதிமுகவிடம் அப்ளிகேஷன் போடவில்லை: சொல்கிறார் எச்.ராஜா appeared first on Dinakaran.